மாநில செய்திகள்

கணவரை கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து மனைவியே சதி செய்தது அம்பலம்இருவரும் கைது; பரபரப்பு தகவல்கள் + "||" + Kill the husband Along with the boyfriend Wife conspiracy was exposed Both arrested Sensitive information

கணவரை கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து மனைவியே சதி செய்தது அம்பலம்இருவரும் கைது; பரபரப்பு தகவல்கள்

கணவரை கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து மனைவியே சதி செய்தது அம்பலம்இருவரும் கைது; பரபரப்பு தகவல்கள்
சென்னை திருவான்மியூர் கடற்கரையில் புதுமண தம்பதியை தாக்கி நகை பறித்த வழக்கில் திடீர் திருப்பமாக, கணவரை கொலை செய்ய புதுப்பெண் காதலருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அடையாறு,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, நார்த்தாம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரவன்(வயது 30). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சென்னை தரமணியில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த வினோதினி என்கிற அனிதா(25) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.


புதுமண தம்பதியினர் சென்னையை அடுத்த பல்லாவரம் தர்கா சாலையில் ஒரு வீட்டில் வசித்துவந்தனர். கதிரவன் நேற்று முன்தினம் காலை தனது மனைவியுடன் திருவான்மியூர் கடற்கரை சாலையில் நடந்து சென்றபோது மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கதிரவனை இரும்பு கம்பியால் தாக்கி, 12 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 செல்போன்களை பறித்துச்சென்றதாக கூறப்பட்டது.

அந்த பகுதியில் இருந்தவர்கள், படுகாயத்துடன் மயக்கம் அடைந்த கதிரவனை ஆம்புலன்ஸ் மூலம் அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி அனிதா திருவான்மியூர் போலீசில் புகார் செய்தார். அடையாறு போலீஸ் துணை கமிஷனர் சேஷாங் சாய் தலைமையில், தரமணி உதவி கமிஷனர் விஸ்வநாத் ஜெயன், திருவான்மியூர் இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டின் ஜெயசில், தனசெல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருந்த ஒரு கண்காணிப்புகேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்த போலீசார், அதில் பதிவான ஒருவரின் படத்தை அனிதாவிடம் காட்டி விசாரித்தனர். அந்த படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனிதா, போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அனிதாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர், தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

அனிதாவும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்துவரும் விளாத்திகுளம் குறுவார்பட்டியை சேர்ந்த அந்தோணி ஜெகன்(25) என்பவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் அனிதாவின் வீட்டிற்கு தெரியாததால், அவரது பெற்றோர் அவரை கதிரவனுக்கு திருமணம் செய்துவைக்க நிச்சயம் செய்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா, தனது காதல் விவகாரத்தை வீட்டில் சொல்ல துணிச்சல் இல்லாமல் பெற்றோர் நிச்சயித்த கதிரவனையே கடந்த மாதம் கரம்பிடித்தார். ஆனாலும் கதிரவனுடன் வாழவிருப்பமின்றி காதலன் நினைவிலேயே இருந்த அனிதா, அடிக்கடி அந்தோணி ஜெகனுடன் செல்போனில் பேசி வந்தார்.

கடந்த வாரம் அந்தோணி ஜெகனை செல்போனில் தொடர்புகொண்ட அனிதா, நாம் சேர்ந்து வாழவேண்டும் என்றால் எனது கணவரை கொலை செய்யவேண்டும் என கூறினார். அதற்காக இருவரும் சேர்ந்து கொலை திட்டம் தீட்டியதுடன், காதலனை சென்னைக்கு வரவழைத்தார்.

அதன்படி தனது கணவரை சனிக்கிழமை காலை வற்புறுத்தி திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்துவந்த அனிதா, அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச்சென்று கண்ணாமூச்சி விளையாடலாம் எனக்கூறி கைக்குட்டையில் அவரது கண்களை கட்டி விளையாடினார்.

அப்போது காதலன் அந்தோணி ஜெகனுக்கு அங்கிருந்தபடியே அனிதா செல்போனில் தகவல் அனுப்பினார். இதைத்தொடர்ந்து அங்குவந்த அந்தோணி ஜெகன், இந்த சதி பற்றி எதுவும் தெரியாமல் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்த கதிரவனை இரும்பு சுத்தியல் மற்றும் அரிவாளால் தலையில் சரமாரியாக தாக்கினார். இதனால் பலத்த காயமடைந்த கதிரவன் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்துவிழுந்தார்.

உடனே அனிதா தாங்கள் இருவரும் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலிகளையும், 2 செல்போனையும் காதலனிடம் கொடுத்து அங்கிருந்து சென்றுவிடும்படி கூறினார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக சிறிது நேரம் கழித்து கூச்சலிட்ட அனிதா, கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கேட்டதாகவும், அதை தரமறுத்ததால் தனது கணவரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு நகைகளை பறித்துச் சென்றுவிட்டதாகவும் அங்கிருந்தவர்களிடம் நாடகமாடினார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த பரபரப்பு தகவல்கள் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அந்தோணி ஜெகன் செல்போன் சிக்னலை ஆய்வுசெய்தனர். அதில் அவர் சனிக்கிழமை அதிகாலையில் மதுரையில் இருந்து சென்னை வந்து, மீண்டும் மதுரைக்கு திரும்பிச்சென்றது தெரியவந்தது.

அனிதாவை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலை வைத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் பதுங்கியிருந்த அவரது காதலன் அந்தோணி ஜெகனையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 பவுன் தங்க சங்கிலி, 2 செல்போன்கள் மற்றும் கதிரவனை தாக்க பயன்படுத்திய சுத்தியல், அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

படுகாயம் அடைந்த கதிரவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கடற்கரையில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.