மாநில செய்திகள்

சித்துவுக்கு எதிராக சென்னையில் பா.ஜனதா இன்று போராட்டம் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு + "||" + Against Sidhu BJP today in Chennai Tamilnadu Soundararajan announcement

சித்துவுக்கு எதிராக சென்னையில் பா.ஜனதா இன்று போராட்டம் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

சித்துவுக்கு எதிராக சென்னையில் பா.ஜனதா இன்று போராட்டம் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு
தமிழ்மொழி பற்றி மோசமாக விமர்சனம் செய்த சித்துவுக்கு எதிராக சென்னையில் பா.ஜனதா சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடத்தப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்து உள்ளார்.
சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தமிழையோ, தமிழ்நாட்டையோ இழித்து பேசினால் அல்லது தமிழ் மொழியை வேறுபடுத்தி பேசினால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உடனே கொதித்து எழுவார்கள். ஆனால், பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான சித்து தமிழ்நாட்டை பற்றியும், தமிழர்களின் உணவு பழக்கவழக்கத்தை பற்றியும், தமிழ் மொழியை பற்றியும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.


பாகிஸ்தானையும், தமிழகத்தையும் ஒப்பிட்டு தமிழ்நாட்டைவிட பாகிஸ்தானுக்கு செல்வது சிறந்தது. தமிழ்நாட்டு உணவு பழக்கத்தைவிட பாகிஸ்தான் உணவு பழக்கம் சிறந்தது. பாகிஸ்தான் மொழி சிறந்தது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஆனால், தமிழகத்தில் இருந்து ஒரு குரல் கூட எழும்பவில்லை. இதுவே பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தமிழை விமர்சனம் செய்திருந்தால் உடனே பொங்கி, பொங்கி எழுவார்கள்.

தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் தமிழ் உணர்வும், தமிழ் எழுச்சியும் கட்சி சார்ந்ததுதான். மொழி சார்ந்ததாக அல்லாமல், உடன்படும் கட்சி சார்ந்ததாக, சுயநலம் சார்ந்ததாகத்தான் இருக்கிறது. சித்து மட்டும் அல்ல, அவரது கட்சி தலைவரான ராகுல்காந்தியும் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

தமிழ் மொழியையும், தென்னிந்தியர்களையும் ஒட்டுமொத்தமாக சித்து அவமரியாதை செய்து இருக்கிறார். இதற்கு காங்கிரசை சேர்ந்தவர்களும், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களான மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஆனால், பா.ஜனதா கட்சி இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது. சித்துவின் வார்த்தைகளை அவர் திரும்பப்பெற வேண்டும். சித்து மன்னிப்பு கேட்க வேண்டும், அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும், தமிழுக்கு எதிராக ஒரு கருத்து வரும் போது வாய் மூடி மவுனியாக இருக்கும் தமிழக அரசியல் கட்சிகளை கண்டித்தும் பா.ஜனதா சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நாளை காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

ராகுல்காந்தியோ, திருநாவுக்கரசரோ இது கட்சியின் கருத்து அல்ல என்று ஏன் கூறவில்லை. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் மவுனம் சாதிப்பது ஏன்? இதே போன்ற கருத்தை பா.ஜனதாவினர் தெரிவித்து இருந்தால், பத்திரிகைகள் முழுவதும் நிரம்பி வழியும் வகையில் கண்டன அறிக்கைகள் குவிந்து விடும். ஆனால், இன்று எங்கோ எல்லோரும் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழ் உணர்வாளர்கள் எங்கே? என நான் தேடுகிறேன்.

தமிழகத்தில் சித்துவுக்கும், கவிஞர் வைரமுத்துவுக்கும் எதிர்ப்பு இல்லை. முகநூலில் பதிவு போட்டதற்கே கைது செய்ய சொல்லும் தலைவர்கள், முகத்துக்கு முகம், நேருக்கு நேர் பாலியல் பலாத்கார புகார்கள் நடைபெறும் போது அதைப்பற்றி வாயே திறக்கமாட்டார்கள்.

மொழி உணர்வாக இருக்கட்டும், இன உணர்வாக இருக்கட்டும், பால் உணர்வாக இருக்கட்டும் அது கட்சி சார்ந்தது, நபர் சார்ந்தது, அவர்களுக்கான சுயநலம் சார்ந்ததாக உள்ளதே தவிர பொதுப்படையாக எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.