பட தயாரிப்பாளர்களின் கஜானாவை காலி செய்தவர் அ.தி.மு.க. நாளேடு கடும் பாய்ச்சல்


பட தயாரிப்பாளர்களின் கஜானாவை காலி செய்தவர் அ.தி.மு.க. நாளேடு கடும் பாய்ச்சல்
x
தினத்தந்தி 15 Oct 2018 11:30 PM GMT (Updated: 15 Oct 2018 10:39 PM GMT)

கமல்ஹாசன் ஒரு காகித பூ. பட தயாரிப்பாளர்களின் கஜானாவை காலி செய்தவர் என்று அ.தி.மு.க. நாளேடு கடுமையாக தாக்கி செய்தி வெளியிட்டு உள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது புரட்சி தலைவி அம்மா’வில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர் தான் கஜானாவை காலி செய்தார் என்று ஜெயலலிதா மீது கமல்ஹாசன் புழுதிவாரி தூற்றி இருக்கிறார். ஜெயலலிதா உயிரோடு இருக்கிற வரை இதுபோன்ற கருத்துகளை சொல்வதற்கு தைரியம் இல்லாத கோழையாக இருந்துவிட்டு, வங்கத்து கடலோரம் உறங்க சென்ற அவர் எழுந்து வரமாட்டார் என்கிற தைரியத்தால் உண்மைக்கு மாறான தகவல்களை எல்லாம் சொல்லி, ஏகத்துக்குமாக அ.தி.மு.க.வையும், ஜெயலிதாவையும் பழிக்கிறார்.

தமிழகத்துக்கு வருவாய் பெருக்கும் திட்டங்களை வகுத்து, அதன் மூலம் கஜானாவை நிரம்பி வழியும் பொக்கிஷ பெட்டகமாக மாற்றியது ஜெயலலிதா தான்.

எனக்காக ஏதுமில்லை எல்லாமும் என் மக்களுக்கே என்னும் தவத்தால் வாழ்ந்து, தமிழ் உலகிற்கு ஏராள வளர்ச்சியையும், மலர்ச்சியையும் வழி வகுத்து தந்த விடையை கமல்ஹாசன் என்கிற காகிதப்பூ ஏதோ, தன்னை மெத்த அறிவாளி என்று கருதிக்கொண்டு அலைகிற மேற்படி அட்டைக் கத்தி, கஜானாவை காலி செய்தார் என்று கருத்து சொல்லி இருப்பது உளறல் நாயகனின் கூமுட்டை தனத்தை தான் காட்டுகிறது.

முக்தா சீனிவாசனின் மொத்த கஜானாவையும் காலி செய்தவர். கமல்ஹாசனை வைத்து ‘அந்த ஒரு நிமிடம் படம்’ எடுத்தேன். நான் நிம்மதியை தொலைத்ததே அந்த ஒரு நிமிடத்தில் தான் என்று தலையில் முக்காடு போட்டுக் கொண்டு புலம்பிய மேஜர் சுந்தர்ராஜன், தமிழ் திரையுலகத்தால் முதலாளி என்று அழைக்கப்பட்ட ரைக்டர் ஸ்ரீதர், இவரை வைத்து ‘நானும் ஒரு தொழிலாளி’ படம் எடுத்து, நடுத்தெருவுக்கு வந்த கதை. ‘ஆளவந்தான்’ என்னை அழிக்க வந்தான் என்று கலைப்புலி தாணுவை கடனில் தள்ளி கண்ணீர் கசிய வைத்தது. ‘மன்மத அம்பு’ என்று படம் எடுத்து, மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த ஜெமினி பிலிம்ஸ்.

கலைஞன், வெற்றி விழா என இவரை வைத்து படம் எடுத்து நொடிப்பு நிலைக்கு ஆளான நடிகர் சிவாஜி பிலிம்ஸ். முதலாளி என எல்லோராலும் அழைக்கப்பட்ட எஸ்.ஏ.ராஜ்கண்ணுவை மகாநதிக்குள் தள்ளி மூழ்கடித்த மகா கேவலம்.

‘விஸ்வரூபம்-2’ மற்றும் தசாவதாரத்தால், ஆஸ்கார் ரவியை அழித்து முடித்தது. குணா படத் தயாரிப்பாளரை குணாவாகவே மாற்றியது. லிங்குசாமியின் மொத்த கையிருப்பையும் ஒற்றை படத்தின் மூலம் உருவி எடுத்தது.

எடுக்காத படமாம் மருதநாயகத்தை வைத்து எலிசபெத் ராணியையே ஏமாற்றியது என்றெல்லாம் ஏராளமான தயாரிப்பாளர்களின் கஜானாவை காலி செய்த பேர் வழி தன்னைப் போலவே, பிறரை கருதிக் கொண்டு ஜெயலலிதாவை விமர்சிப்பது மையம் நடத்துபவரின் மனநோயைத் தான் காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story