மாநில செய்திகள்

நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி பாலியல் புகார் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் பெற்றார் + "||" + On actor Shanmugarajan Actress Rani complaint Because sorry asked Withdrawal

நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி பாலியல் புகார் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் பெற்றார்

நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி பாலியல் புகார் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் பெற்றார்
தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீசில் புகார் கொடுத்தார். நடிகர் மன்னிப்பு கேட்டதால், பின்னர் அந்த புகாரை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.
செங்குன்றம்,

சென்னை வடபழனி சாலிகிராமம் அருணாசலம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரசாந்த். இவரது மனைவி நடிகை ராணி (வயது 44). வில்லுபாட்டுக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நடிகர் அஜித் நடித்த காதல்கோட்டை படத்தில் ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா...’ என்ற பாடலிலும், ஜெமினி படத்தில் ‘ஓ போடு...’ என்ற பாடலிலும் நடனமாடி பிரபலம் ஆனார்.


நடிகர் சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில் ஆசிரியை வேடத்தில் நடித்தார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நந்தினி’ என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சண்முகராஜன் (55). விருமாண்டி, சிவாஜி, சண்டகோழி, அந்நியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

இவர் தற்போது நந்தினி தொலைக்காட்சி தொடரில் நடிகை ராணியின் கணவராக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி சென்னை வடபழனியில் உள்ள மோகன் கார்டன் என்ற இடத்தில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகை ராணி, சண்முகராஜனை கன்னத்தில் அறைவது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நடிகை ராணி, சண்முகராஜனை உண்மையாகவே கன்னத்தில் அறைந்து விட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகராஜன் ராணியிடம் தகராறு செய்தார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். ஒரு வழியாக இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இந்தநிலையில் தொலைக் காட்சி தொடருக்காக சென்னை செங்குன்றம் ஜி.என்.டி சாலையில் உள்ள ஒரு துணிக்கடையில் தீபாவளிக்கு துணி எடுப்பது போல ஒரு காட்சி நேற்று படமாக்கப்பட்டது. அப்போது நடிகை ராணியின் கணவர் பிரசாந்த், சண்முகராஜனை பார்த்து கேலி செய்வது போல் சிரித்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜன் பிரசாந்த்தை தாக்கினார். பதிலுக்கு பிரசாந்த்தும் அவரை தாக்கினார். இந்த சமயத்தில் ‘மேக்கப்’ அறையில் இருந்து வந்த நடிகை ராணி, நடிகர் சண்முகராஜனை தாக்கியதாகவும், பதிலுக்கு சண்முகராஜன் ராணியை தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே நடிகை ராணி, கணவர் பிரசாந்த்துடன் செங்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு நடிகர் சண்முகராஜன் கடந்த ஒரு வாரமாக தொலைக்காட்சி படப்பிடிப்பில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதனை தனது கணவரிடம் தெரிவித்ததால் தன்னை தாக்கியதாகவும் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து நடிகர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான நடவடிக்கைளில் செங்குன்றம் போலீசார் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று மாலை நடிகை ராணி செங்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு இருந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து நடிகர் சண்முகராஜன் தன்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டார். தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் 350 குடும்பங்களின் நலன் பாதிக்கபடும் என்பதால் தனது புகாரை வாபஸ் பெற்று கொள்வதாக தெரிவித்தார்.

அப்போது நடிகர் சண்முகராஜனும் அங்கு வந்திருந்தார். இருவரும் சமரசம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்தில் இருந்து கிளம்பி சென்றனர்.