குட்கா வியாபாரிகளிடம் இருந்து ‘உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாதம் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கினார்’ ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வக்கீல் தகவல்


குட்கா வியாபாரிகளிடம் இருந்து ‘உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாதம் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கினார்’   ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வக்கீல் தகவல்
x
தினத்தந்தி 16 Oct 2018 11:31 PM GMT (Updated: 16 Oct 2018 11:31 PM GMT)

குட்கா வழக்கில் சிறையில் இருக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன் மாதம் ரூ.2½ லட்சம் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பு வக்கீல் கூறினார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை,

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டது. இதற்காக, அமைச்சர்கள், டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சி.பி.ஐ. அதிகாரிகள், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட பலரது வீடுகளில் அதிரடி சோதனை செய்தனர்.

பின்னர், குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ணன் பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை கைது செய்தனர். இதில், நவநீதகிருஷ்ணன் பாண்டியன், செந்தில்முருகன் ஆகியோர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து இவர்கள் இருவரும் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதில், செந்தில்முருகனின் ஜாமீன் மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘செந்தில்முருகன் 42 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். அவர் உரிமம் மட்டுமே வழங்கினார். வேறு எந்த தீவிர குற்றச்சாட்டுகள் அவர் மீது இல்லை’ என்று மனுதாரர் வக்கீல் வாதிட்டார்.

சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல், ‘தமிழகத்தில் குட்கா வழக்கு மிக முக்கியமானது. இதுவரை 6 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மனுதாரர் செந்தில்முருகன் 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை மாதம் ரூ.2½ லட்சத்தை லஞ்சமாக குட்கா வியாபாரிகளிடம் இருந்து பெற்றுள்ளார். இதற்கு ஆதாரம் உள்ளது’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வி.பார்த்திபன், ‘மாதம் ரூ.2½ லட்சம் லஞ்சம் வாங்கியதாக மனுதாரர் மீது குற்றம் சுமத்தப்படுவதால், அவருக்கு இப்போது ஜாமீன் வழங்க முடியாது.

விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.


Next Story