அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்வு : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்வு : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2018 12:23 AM GMT (Updated: 17 Oct 2018 12:23 AM GMT)

“அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்த்தப்படும்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை,

அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர் களுக்கு 2 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி நடந்த சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை உருவாக்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்தது.

விழாவுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமை தாங்கினார். பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் தீரஜ்குமார் வரவேற்றார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்புரை வழங்கி பேசியதாவது:-

கூடைப்பந்து மற்றும் கைப்பந்து விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி, திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் கால்வாலியம் செயற்கை தகடுகளாக மேற்கூரை வசதியுடன் கூடிய கூடைப்பந்து மற்றும் கைப்பந்து விளையாட்டு மைதானங்கள் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது.

உலகத்திறனாளர்களை கண்டறியும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விளையாட்டில் அதிக திறமை உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று வாகை சூட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரிலும், ஒரு திறந்த வெளி விளையாட்டரங்கம், ஒரு உள் விளையாட்டரங்கம் மற்றும் ஒரு நீச்சல் குளம் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

விளையாட்டுத் துறையில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்குவதற்கு அரசு என்னதான் பெரிய அளவில் திட்டங்களை செயல்படுத்தினாலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியிடங் கள் நிரப்புவதில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற குறைபாடு அவர்களிடமும், அவர்களது குடும்பத்தினரிடமும் நிலவுகிறது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட பதவிகளில் தகுதியின் அடிப்படையில் 2 சதவீதம் வரை உள் ஒதுக்கீடாக விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எனது சுதந்திர தின உரையில் அறிவித்து, அதனை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக, தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இக்குழு விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து, இந்த உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும். இந்த அறிவிப்பு அதிக அளவில் இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபடச் செய்ய வழிவகை செய்யும் என்று சொன்னால் அது மிகையாகாது.

இங்கே பேசியவர்கள் பல கோரிக்கைகளை வைத்தார் கள். அதை பரிசீலித்து ஒரு கோரிக்கையை நான் இந்த நேரத்திலேயே அறிவிக்க விரும்புகின்றேன். ஏற்கனவே, தற்போது வேலைவாய்ப்பில் உள்ள 2 சதவீதமான உள் ஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்தத் தருணத்தில் தெரிவித்துகொள்கிறேன்.

இந்தியாவிலேயே, சர்வதேச அளவில் நம்முடைய விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் பல்வேறு போட்டியிலே கலந்துகொண்டு தங்கம் வென்றார்கள். 8-வது இடத்திலிருந்து இப்பொழுது 3-வது இடத்திற்கு நாம் முன்னேறி இருக்கின்றோம் என்று சொன்னார்கள். இந்த அரசு விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு வகையிலே உதவி செய்து, 3-வது இடத்திலிருந்து முதல் இடத்திற்கு வருவதற்கு உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்யும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “உலக விளையாட்டு வரைபடத்தில் என்றென்றும் நிலையான முதன்மையான ஒரு இடத்தை தமிழ்நாடு பெற வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் சர்வதேச தரத்தில் விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கியவர் ஜெயலலிதா. இதன் மூலம் இன்றைய இளைய சமுதாயத்தினர் நன்கு பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு பல பதக்கங் களை வென்று நமக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். அரசு வேலைவாய்ப்பில் உள் ஒதுக்கீடு வீரர்கள் வாழ்வில் நிச்சயம் ஒளியேற்றி வைக்கும். இதன் மூலம் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விளையாட்டு துறையில் ஈடுபடுத்துவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன், தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், 5 முறை உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவர் ராஜ்சத்யன், தமிழ்நாடு தேக்வாண்டோ சங்க தலைவர் ஐசரி கணேஷ், இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி.பாஸ்கரன், தமிழ்நாடு சிலம்பாட்ட சங்க தலைமை ஆலோசகர் அமானுல்லா ஆகியோர் பேசுகையில், விளையாட்டு துறைக்கு தமிழக அரசு அளித்து வரும் ஊக்கம் குறித்தும், விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் உள்ஒதுக் கீடு அளித்தது எந்த அரசும் செய்யாத சாதனை என்றும் பாராட்டினார்கள். அத்துடன் அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

விழாவில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், டி.ஜெயக்குமார், தங்கமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு கைப்பந்து சங்க தலைவர் வாசுதேவன் மற்றும் விளையாட்டு சங்க நிர்வாகிகள், விளையாட்டு நட்சத்திரங்கள் திரளாக கலந்துகொண்டனர். விழாவில் விளையாட்டு சங்க நிர்வாகிகள் சார்பில் முதல்-அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவையொட்டி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சர்வதேச போட்டிகளில் சாதித்த முகமது ரியாஸ், திருமாவளவன் (2 பேரும் ஆக்கி), ஷைனி வில்சன் (தடகளம்) உள்பட தமிழக முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்களுக்கு முதல்-அமைச்சர் விருது வழங்கி கவுரவித்தார். அத்துடன் கடந்த ஆண்டு (2017) நடந்த தேசிய பள்ளி குழும விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 465 வீரர்- வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.8 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையை முதல்-அமைச்சர் வழங்கினார். முடிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர் நன்றி கூறினார். 

Next Story