பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் சுசிகணேசன் வழக்கு


பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் சுசிகணேசன் வழக்கு
x
தினத்தந்தி 17 Oct 2018 10:00 PM GMT (Updated: 17 Oct 2018 7:16 PM GMT)

தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் இயக்குனர் சுசிகணேசன் வழக்கு தொடர்ந்தார்.

ஆலந்தூர், 

தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் இயக்குனர் சுசிகணேசன் வழக்கு தொடர்ந்தார்.

‘திருட்டு பயலே’, ‘கந்தசாமி’ உள்பட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசிகணேசன். இவர் மீது பெண் இயக்குனர் லீனா மணிமேகலை, ‘மீடூ’வில் பாலியல் குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குனர் சுசிகணேசன், “என் மீது எந்தவித குற்றமும் இல்லை. என் மீது பொய் புகார் கூறியதற்கு லீனா மணிமேகலை மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் கோர்ட்டு மூலம் மானநஷ்ட வழக்கு தொடருவேன்” என்று தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் நேற்று சென்னை சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில், தன் மீது ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக கூறி பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது இயக்குனர் சுசிகணேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டு வெளியே வந்த இயக்குனர் சுசிகணேசன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் மிரட்டலுக்காக வழக்கு தொடரவில்லை. ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணையின்போது ஆஜர்ஆவேன். சமுதாயத்துக்கு நான் நல்லவன் என்று காட்டுவதற்காக வழக்கு போடவில்லை. என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல அப்பா என்பதை நிரூபிக்க வேண்டும்.

நான் பள்ளியில் படித்தபோது என் ஆசிரியை என்னை தொட்டு பேசியதை நான் சொல்ல முடியும். ஆண் மீது எல்லோரும் குறை சொல்லிக்கொண்டு இருந்தால் ஓடிப்போகவேண்டியதுதான்.

குற்றம் சொல்லும் முன் தங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? என்பதை காட்டுங்கள். பொதுவாக சொல்லுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுபோல் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தால் பெண்களை யாரும் வேலைக்கு வைக்க மாட்டார்கள். இதுபோன்ற செயல் பெண்களை பின்நோக்கி அழைத்துச்செல்லும் முயற்சியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் லீனா மணிமேகலை மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆன்-லைனில் போலீஸ் கமிஷனருக்கும் அவர் புகார் செய்து உள்ளார்.

Next Story