தாமிரபரணி மகா புஷ்கர விழா: ஒரே நாளில் 6¼ லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்


தாமிரபரணி மகா புஷ்கர விழா: ஒரே நாளில் 6¼ லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்
x
தினத்தந்தி 21 Oct 2018 11:00 PM GMT (Updated: 21 Oct 2018 7:06 PM GMT)

மகா புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் ஒரே நாளில் 6¼ லட்சம் பக்தர்கள் புனித நீராடினார்கள்.

நெல்லை,

தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இந்த விழா நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்டங்கள், படித்துறைகளில் பகல் நேரத்தில் புனித நீராடும் நிகழ்ச்சியும், மாலையில் தாமிரபரணிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

இந்த விழாவில் தமிழக பக்தர்கள் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நெல்லைக்கு வந்து புனித நீராடி வருகிறார்கள்.

நேற்று சிம்ம ராசிக்காரர்களுக்கு உகந்த நாள் என்பதால் அதற்குரிய ராசிக்காரர்களும், விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்ததால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் நெல்லை மாநகரில் உள்ள 4 படித்துறைகளில் மட்டும் 40 ஆயிரத்து 650 பக்தர்கள் புனித நீராடினர். நெல்லை புறநகர் பகுதிகளில் உள்ள படித்துறைகளில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 605 பேர் நீராடி உள்ளனர். மொத்தம் 3 லட்சத்து 18 ஆயிரத்து 255 பேர் புனித நீராடி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, குரும்பூர், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் நேற்று 3 லட்சத்து 17 ஆயிரத்து 106 பக்தர்கள் புனித நீராடினார் கள். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6 லட்சத்து 35 ஆயிரத்து 361 பேர் புனித நீராடி உள்ளனர்.

மகா புஷ்கர விழாவுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் நெல்லை வந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெல்லையில் இருந்து வெளியூர் சென்ற ரெயில்கள், பஸ்கள் ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை நெல்லை மாவட்டம் பாபநாசம் ராஜேசுவரி மண்டப படித்துறைக்கு வந்தார். அங்கு அவர் மலர்களை தூவி தாமிரபரணிக்கு பூஜை செய்தார். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார். பின்னர் அவர் பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார். பின்னர் அவர் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையிலும் நீராடினார்.

Next Story