நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா இன்று நிறைவு தீப ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு


நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா இன்று நிறைவு தீப ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 22 Oct 2018 11:45 PM GMT (Updated: 22 Oct 2018 8:00 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது.

நெல்லை, 

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. நேற்று தீப ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளிலும் இந்த விழா நடந்து வருகிறது.

தினமும் காலையில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடும் நிகழ்ச்சியும், மாலையில் ஆரத்தி எடுத்து வழிபடும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இந்த புஷ்கர விழாவில் வெளி மாவட்டம் மட்டும் அல்லாமல், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்துகொண்டு புனித நீராடி வருகிறார்கள்.

12-வது நாளான நேற்றும் புஷ்கர விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சியம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், கைலாசபுரம் தைப்பூச மண்டபம், நெல்லை மணிமூர்த்தீசுவரம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயு படித்துறைகளிலும், சீவலப்பேரி துர்காம்பிகை கோவில் படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதேபோல் பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, திருப்புடைமருதூர், கோடகநல்லூர், அத்தாளநல்லூர் உள்ளிட்ட படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

மேலும், பாபநாசத்தில் அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புஷ்கர விழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதேபோல் நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் ஜடாயு படித்துறையிலும் நேற்று மாலையுடன் புஷ்கர விழா நிறைவடைந்தது.

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலில் நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை யாகசாலை பூஜை, மாலை 5.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனத்தின் புஷ்பாஞ்சலி, 6 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

நெல்லை மாவட்டத்தில் 12 நாட்கள் நடைபெற்ற மகா புஷ்கர விழா இன்று மாலையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது.

Next Story