பாடகி சின்மயியுடன் நேர்காணல்: ‘தந்தி’ டி.வி. கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியை 13 லட்சம் பேர் பார்த்தனர் புதிய சாதனை


பாடகி சின்மயியுடன் நேர்காணல்: ‘தந்தி’ டி.வி. கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியை 13 லட்சம் பேர் பார்த்தனர் புதிய சாதனை
x
தினத்தந்தி 24 Oct 2018 12:00 AM GMT (Updated: 23 Oct 2018 10:18 PM GMT)

பாடகி சின்மயி உடனான ‘தந்தி’ டி.வி.யின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியை யூ-டியூப்பில் 13 லட்சம் பேர் பார்த்தனர். இது புதிய சாதனை ஆகும்.

சென்னை, 

‘தந்தி’ டி.வி.யில் ‘கேள்விக்கு என்ன பதில்’ என்கிற பிரபலமான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

நடப்பு நிகழ்வுகளில் தொடர்புடைய அரசியல் தலைவர்கள், சினிமா பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களிடம் நேர்காணல் நடத்தும் இந்த நிகழ்ச்சி மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றதாகும்.

கடந்த 20-ந்தேதி ‘தந்தி’ டி.வி.யில் ஒளிபரப்பான கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் ‘மீ டூ’ விவகாரம் தொடர்பாக பாடகி சின்மயியுடன் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே நடத்திய நேர்காணல் இடம் பெற்றது.

அதன் பின்னர் இந்த நிகழ்ச்சி சமூக வலைத்தளமான ‘யூ-டியூப்’பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பதிவேற்றம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் இந்த நிகழ்ச்சியை பார்த்தனர்.

புதிய சாதனை

இதன் மூலம் அந்த நிகழ்ச்சி புதிய சாதனை படைத்து உள்ளது. அதோடு, யூ-டியூப்பின் டிரெண்டிங்கிலும் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரத்துக்கும் மேலாக 3-வது இடத்தில் இருந்தது.

முன்னதாக நடிகர் கமல்ஹாசன் உடனான கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சி, ‘யூ-டியூப்’பில் பதிவேற்றம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கு அதிகமானோரால் பார்க்கப்பட்டது.

அதே போல் பிரதமர் மோடி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா ஆகியோர் உடனான கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சிகளையும் யூ-டியூப்பில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story