தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 1 Nov 2018 5:09 AM IST (Updated: 1 Nov 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் பரிசு பொருட்கள் மற்றும் பணம் சிக்கியது.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையரகத்தில் தொழிலாளர் நலத்துறையின் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையின்போது தனியார் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு காண்பதற்கு தொழிலாளர் நலத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சிலர் லஞ்சம் மற்றும் பரிசு பொருட்கள் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சென்னை மாவட்ட துணை கலெக்டர் சுமதி, லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. லவகுமார் ஆகியோர் தலைமையில் 15 லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 5 மணி அளவில் தொழிலாளர் ஆணையரகம் வந்தனர். அந்த கட்டித்தின் 2-வது தளத்தில் உள்ள தொழிலாளர் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர் அலுவலகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை தீர்ப்பாயத்தில் சோதனை மேற்கொண்டனர்.

10-க்கும் மேற்பட்ட அறைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை செய்தனர். இதில் பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு காண்பதற்கு அதிகாரிகள் லஞ்சமாக பணம் வாங்கியதற்கான ஆவணங்கள் மற்றும் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் துறையின் சில அதிகாரிகளின் காரில் இருந்து பரிசு பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் மற்றும் பரிசு பொருட்கள் பற்றிய விவரங்களை போலீசார் பதிவு செய்து, அதற்கான ஒப்புதலையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெற்றனர்.

சோதனை நடைபெற்ற சமயத்தில் அலுவலகத்துக்கு வந்திருந்த முதியவர் ஒருவர் அதிக நேரம் காத்திருந்ததால் திடீரென மயக்கம் அடைந்தார். அவரை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சோதனை இரவு வரையிலும் நீடித்தது.

சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு? ஆவணங்கள் என்னென்ன? பரிசு பொருட்கள் வாங்கிய அதிகாரிகள் யார்? என்ற விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிடவில்லை. சோதனை முழுவதுமாக முடிந்தபின்னரே அதுபற்றிய தகவல் தெரிவிக்கப்படும் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Next Story