தீபாவளி பண்டிகை அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி : அரசு பரிசீலிப்பதாக அமைச்சர் தகவல்


தீபாவளி பண்டிகை அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி : அரசு பரிசீலிப்பதாக அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 31 Oct 2018 11:58 PM GMT (Updated: 2018-11-01T05:28:14+05:30)

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு பரிசீலினை செய்வதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை பள்ளிக்கரணையில் 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சதுப்பு நிலப்பகுதியில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படகு குழாம், சிறுவர்கள் விளையாட்டு பூங்கா மற்றும் நடைபயிற்சி பூங்கா அமைய உள்ளது.

அந்த இடங்களை தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது தலைமை வனப்பாதுகாவலர் மல்லேசப்பா மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும், அங்கு குவிந்துள்ள குப்பைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

அப்போது அவரிடம், தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கி இருப்பது பற்றியும், அந்த நேரத்தை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறி இருப்பது பற்றியும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் பதில் அளிக்கையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்க இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கலாமா? என்ற யோசனை அரசின் கவனத்தில் இருப்பதாகவும், சரியான நேரம் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், கோர்ட்டு தீர்ப்பில் தான் தலையிட முடியாது என்றும், தமிழகத்தில் புகை அதிகம் வரக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கோர்ட்டு தீர்ப்பை மீறி பட்டாசு வெடிப்பவர்களை சுற்றுச்சூழல் அதிகாரிகள் கண்காணிப்பார்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்றும், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள்தான் இப்பணியை மேற்கொள்வார்கள் என்றும் அமைச்சர் கருப்பண்ணன் பதில் அளித்தார்.

இதற்கிடையே பட்டாசு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆத்மாராம் நட்கர்னி, பட்டாசு தயாரிப்பில் பேரியம் என்ற நச்சுப்பொருள் 60 சதவீதம் பயன்படுத்தப்படுவதாகவும், எனவே பேரியம் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், பேரியம் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை இந்த ஆண்டு முதல் டெல்லியில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாகவும், மற்ற மாநிலங்களில் பேரியம் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை இந்த ஆண்டு மட்டும் விற்பனை செய்யலாம் என்றும், அடுத்த ஆண்டு முதல் பேரியம் பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்க தடை விதிக்கப்படுவதாகவும் கூறினார்கள்.

அத்துடன், தீபாவளி அன்று தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு அப்படியே தொடரும் என்றும், மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என்றும், அந்த 2 மணி நேரம் எது என்பது பற்றி அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள். 

Next Story