ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிரான வழக்கு : ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு


ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிரான வழக்கு : ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு
x
தினத்தந்தி 1 Nov 2018 5:34 AM IST (Updated: 1 Nov 2018 5:34 AM IST)
t-max-icont-min-icon

மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்க்கும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல கோடி ரூபாய் செலவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வக்கீல் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார். அதில், சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்ட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சரான ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் கட்ட அனுமதியளிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 10-ந் தேதி ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. கடந்த மே 7-ந் தேதி இந்த நினைவிடத்திற்காக அடிக்கல்லும் நாட்டப்பட்டு உள்ளது. ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டு சுப்ரீம் கோர்ட்டினால் கைவிடப்பட்டுவிட்டது. தற்போதைய நிலையில் அவர் தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல. அவருக்கு நினைவிடம் கட்டுவது என்பது அரசு தன் அதிகார வரம்புக்குட்பட்டு எடுத்துள்ள முடிவு ஆகும்.

மாநில கடலோர மேலாண்மை ஒழுங்குமுறை மண்டல ஆணையம், சென்னை மாநகராட்சி என அனைவரிடமும் உரிய அனுமதி பெற்ற பிறகே நினைவிடம் கட்டும்பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் எந்த வித விதிமீறலோ அல்லது சட்டவிரோதமோ நடைபெறவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை வருகிற 12-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story