போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி முன்பணம் இன்று வழங்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு


போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி முன்பணம் இன்று வழங்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Nov 2018 10:30 PM GMT (Updated: 1 Nov 2018 10:09 PM GMT)

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி முன்பணம் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்தார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3,4,5 ஆகிய தேதிகளில் சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருகிற திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்ட காரணத்தால், நாளை (இன்று) முதல் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே ஈ.சி.ஆர். வழியாக செல்லக்கூடிய பஸ்கள் கே.கே.நகர் பஸ் பணிமனைகளில் இருந்தும், காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, ஓசூர் மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்தும், ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் புதிதாக திறக்கப்பட்ட மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் 2-ந்தேதி (இன்று) முதலே பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவுப்படி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இன்று (நேற்று) 8.33 சதவீதம் போனஸ், 11.67 சதவீதம் ஊக்கத் தொகை என மொத்தம் 20 சதவீதம் தொகை வழங்கப்பட்டது.

மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பண்டிகைகால முன்பணமாக ரூ.45 கோடி வழங்குவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்திருக்கிறார். இந்த பணம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நாளை (இன்று) வழங்கப்படும். ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம், 2018-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதம் ஆகிய 4 மாதங்களுக்கு நிலுவைத்தொகை ரூ.251 கோடி அவர்களுடைய வங்கி கணக்கில் வருகிற திங்கட்கிழமை வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- போக்குவரத்து தொழிலாளர்கள் 2-ந்தேதி (இன்று) கூட்டம் நடத்தி வேலைநிறுத்த போராட்டம் குறித்து அறிவிப்பதாக கூறியிருக்கிறார்களே?

பதில்:- போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தேவையானவை வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி:- ஒரு வேளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால்...

பதில்:- முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து இருக்கிறோம். போக்குவரத்து ஊழியர்களில் 75 சதவீதம் பேர் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தில் இருக்கிறார்கள். நிச்சயமாக இந்த அரசுக்கு எந்தவித அவப்பெயரும் ஏற்படாத வகையில் அவர்கள் தொடர்ந்து பணிக்கு வருவார்கள்.

பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தேவையான வசதிகளை அரசு செய்துக் கொடுக்கும்.

கேள்வி:- போக்குவரத்து தொழிலாளர்கள் ரூ.6 ஆயிரத்து 800 கோடிக்கு தீர்வு வரவில்லை என்று கேட்கிறார்களே?

பதில்:- அந்த தொகையை உடனே எடுத்துக் கொடுத்து விட முடியாது. படிபடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கேள்வி:- தனியார் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- இந்திய மோட்டார் வாகனச்சட்டத்தில் ஆம்னி பஸ்களுக்கு என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை. சூழ்நிலைக்கு தகுந்தவாறு அவர்கள் கட்டணம் வசூலிக்கிறார்கள். எனினும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சென்ற ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது கூடுதல் பயண கட்டணம் வசூலித்த 36 ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டது.

இந்த ஆண்டும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் குறித்து 18004256151 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- ஆம்னி பஸ்களுக்கு தமிழக அரசே கட்டணம் நிர்ணயம் செய்யலாமே?

பதில்:- மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். ஆம்னி பஸ்களுக்கு நிகராக சொகுசு பஸ்களை தமிழக அரசு இயக்குகிறது. எனவே பொதுமக்கள் அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனினும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story