கல்லூரி மாணவர் ஓட்டி வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்த இளம்பெண்-சிறுமி பலி உறவினர்கள் சாலை மறியல்


கல்லூரி மாணவர் ஓட்டி வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்த இளம்பெண்-சிறுமி பலி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Nov 2018 3:48 AM IST (Updated: 2 Nov 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவர் ஓட்டி வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்த இளம்பெண், சிறுமி இருவரும் பரிதாபமாக இறந்தனர். விபத்துக்கு காரணமான கல்லூரி மாணவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அம்பத்தூர்,

சென்னை வில்லிவாக்கம், தாகூர் நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி அனிதாதேவி. இவர்களுடைய மகள் பிந்து என்ற சுசி(வயது 8). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 30-ந் தேதி மாலை பிந்துவை, பள்ளியில் இருந்து அவருடைய அத்தையான விஜயலட்சுமி(28) வீட்டுக்கு அழைத்து வந்தார். இருவரும் வில்லிவாக்கம் ஐ.சி.எப். சிக்னல் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார், இவர்கள் 2 பேர் மீதும் மோதியது. இதில் பிந்து, விஜயலட்சுமி இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதற்கிடையில் மாலை நேரத்தில், போக்குவரத்து மிகுந்த அந்த சாலையில் வேகமாக காரை ஓட்டி வந்து மோதிய கல்லூரி மாணவரான அயனாவரம் எம்.டி.எச். சாலையை சேர்ந்த தொழில் அதிபர் பிரபு என்பவருடைய மகன் சரண் கோபால்(23) என்பவருக்கு அப்பகுதி மக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

உடனே அங்கிருந்த போக்குவரத்து போலீசார், பொதுமக்களிடம் இருந்து கல்லூரி மாணவரை மீட்டனர். இது குறித்து வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுகிலா வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

பின்னர் கல்லூரி மாணவர் சரண் கோபாலை விசாரணைக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுமி பிந்து, மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதைகேட்டு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் சிறுமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி சிறுமியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணியளவில் விஜயலட்சுமியும் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு விபத்துக்கு காரணமான காரை ஓட்டிவந்த கல்லூரி மாணவர் சரண் கோபாலை போலீசார் கைது செய்யாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்ததை கண்டித்தும், உடனடியாக அவரை கைது செய்ய வலியுறுத்தியும் விஜயலட்சுமியின் உறவினர்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் 2 பேரும் உயிரிழந்து விட்டதால் நேற்று காலை மீண்டும் வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரை கண்டித்து வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட முயன்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், உடனடியாக கல்லூரி மாணவர் சரண் கோபாலை கைது செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தாத வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம், போக்குவரத்து துணை கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story