உத்தரகோசமங்கை கோவிலில் காவலாளியை தாக்கி, மரகத நடராஜர் சிலையை திருட முயற்சி


உத்தரகோசமங்கை கோவிலில் காவலாளியை தாக்கி, மரகத நடராஜர் சிலையை திருட முயற்சி
x
தினத்தந்தி 4 Nov 2018 10:46 PM GMT (Updated: 4 Nov 2018 10:46 PM GMT)

உத்தரகோசமங்கை கோவிலில் நள்ளிரவில் காவலாளியை தாக்கிவிட்டு அபூர்வ மரகத நடராஜர் சிலையை திருட முயன்ற கொள்ளையர்கள் எச்சரிக்கை மணி ஒலித்ததால் தப்பி ஓடிவிட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ளது புகழ் வாய்ந்த திருஉத்தரகோசமங்கை கோவில். உலகின் முதல் கோவில் என்று கருதப்படும் இந்த கோவிலில் மங்களநாதர், மங்களநாயகி ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இந்தக் கோவிலில் ஒரே கல்லினால்ஆன அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது.

விலைமதிக்க முடியாத மிகவும் பழமை வாய்ந்த இந்த நடராஜர் சிலை ஒலி, ஒளி அதிர்வுகளால் பாதிக்கப்படாத வகையில் ஆண்டு முழுவதும் சந்தனத்தால் பூசப்பட்டு பாதுகாக்கப்பட்டு இருக்கும். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் கதவு சாத்தப்பட்டு அனைவரும் சென்றுவிட்டனர். கோவிலுக்குள் காவலர்கள் மட்டும் இருந்தனர்.

நள்ளிரவில் நடராஜர் சன்னதியில் திடீரென்று 2 மர்ம நபர்கள் புகுந்தனர். சத்தம் கேட்டு காவலாளி செல்லமுத்து ஓடியுள்ளார். ஆனால், அதற்குள் 2 மர்ம நபர்களும் கம்பி போன்ற ஆயுதத்தால் பலமாக செல்லமுத்துவின் தலையில் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் அந்த இடத்திலேயே விழுந்தார். இதனை தொடர்ந்து நடராஜர் சன்னதி பகுதிக்கு சென்ற மர்ம நபர்கள் நடராஜர் சன்னதி பாதுகாப்பு கதவை உடைத்து திறக்க முயன்றனர். கதவை தொட்டதும் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.

இதனால் அச்சமடைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஒரு எச்சரிக்கை மணியை சேதப் படுத்தியுள்ளனர். ஆனால், வெளிப்புறம் அமைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை மணி தொடர்ந்து ஒலித்துள்ளது. இதனால் கலக்கமடைந்த நபர்கள் அங்கிருந்து வெளியேறி சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் மற்றும் உத்தரகோசமங்கை போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர விசாரணை செய்தனர்.

படுகாயமடைந்த காவலாளி செல்லமுத்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள உருவங்களை வைத்தும், கோவில் பகுதியில் கிடந்த கைலி ஒன்றை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் கோவிலில் பதிவாகி உள்ள தடயங்களை பதிவு செய்தனர். அபூர்வ மரகத நடராஜர் சிலையை வெளியே கொண்டுவர முடியாது. ஏனெனில் உட்புற பகுதி மற்றும் கதவு, சிலையை விட சிறியதாக பாதுகாப்பு கண்ணோட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

நடராஜர் சிலை உள்ள கதவினை திறக்க முயன்றுள்ளதால் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள ஸ்படிக லிங்கத்தை திருட முயன்றிருக்கலாம் என்றும், நகைகள் இருந்தால் திருடிச்செல்ல வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த திருட்டு முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story