போலியாக தர முத்திரை: விழுப்புரத்தில் 150 சிமெண்டு மூட்டைகள் பறிமுதல் - இந்திய தர குழுமம் நடவடிக்கை


போலியாக தர முத்திரை: விழுப்புரத்தில் 150 சிமெண்டு மூட்டைகள் பறிமுதல் - இந்திய தர குழுமம் நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Nov 2018 10:00 PM GMT (Updated: 6 Nov 2018 7:24 PM GMT)

போலியாக தர முத்திரை தொடர்பாக, விழுப்புரத்தில் 150 சிமெண்டு மூட்டைகள் பறிமுதல் செய்து இந்திய தர குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் போலியான தர முத்திரையை பயன்படுத்தி சிமெண்டு மூட்டைகளை விற்பனை செய்து வருவதாக இந்திய தர குழுமத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து இந்திய தர குழுமத்தின் தென் மண்டல அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் தர கட்டுப்பாட்டில் விதி மீறல் செய்யப்பட்டு, இந்திய தர குழும முத்திரையுடன் சிமெண்டுகளை அடைத்து வைப்பதற்காக பயன்படுத்தப்படும் பல்வேறு கம்பெனி பெயர்கள் உடைய 17 ஆயிரம் பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல தர முத்திரையை போலியாக அச்சடித்து சிமெண்டு அடைத்து வைக்கப்பட்ட 150 மூட்டைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 17 ஆயிரம் பைகள் மற்றும் 150 சிமெண்டு மூட்டைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய தர குழும சட்டத்தின்படி இந்த குற்றத்துக்கு 2 வருடம் சிறை தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம். சிறை தண்டனை மற்றும் அபராதம் ஆகியவற்றை சேர்த்து விதிப்பதற்கும் இந்திய தர குழும சட்டத்தில் இடம் உள்ளது. தர கட்டுப்பாட்டில் குறைபாடுகள் இருந்தால் இந்திய தர குழுமத்துக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

மேற்கண்ட தகவல் இந்திய தர குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story