விராட் கோலி அணியின் வெற்றி போன்றது, கர்நாடக தேர்தல் வெற்றி - ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து


விராட் கோலி அணியின் வெற்றி போன்றது, கர்நாடக தேர்தல் வெற்றி - ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து
x
தினத்தந்தி 6 Nov 2018 11:45 PM GMT (Updated: 6 Nov 2018 10:15 PM GMT)

கர்நாடக தேர்தலில் கிடைத்த வெற்றி, விராட் கோலி அணியின் வெற்றி போன்றது என்றும், கூட்டணிக்கு கிடைத்த பலன் என்றும் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள மண்டியா, பல்லாரி, சிவமொக்கா ஆகிய 3 தொகுதிகளுக்கும், சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கும் கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

அதில், 2 நாடாளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஒரு நாடாளுமன்ற தொகுதியை மட்டும் பா.ஜனதா தக்க வைத்தது. இதன் மூலம் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்து உள்ளது.

மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் சிவராமகவுடா, 3 லட்சத்து 24 ஆயிரத்து 943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 2 லட்சத்து 43 ஆயிரத்து 161 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்த தொகுதியாகும். `

சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் பா.ஜனதா வேட்பாளரும், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனுமான பி.ஒய்.ராகவேந்திரா, 47 ஆயிரத்து 388 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

ராமநகர் சட்டமன்ற தொகுதியில், ஜனதா தளம்( எஸ்) வேட்பாளரும், முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவியுமான அனிதா 1 லட்சத்து 9 ஆயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஜமகண்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.நியமகவுடா 39 ஆயிரத்து 480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கர்நாடக இடைத்தேர்தல்களில் 4-1 என கிடைத்த வெற்றி விராட்கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது. இதில் கற்க வேண்டிய பாடம்: கூட்டணி பலன் தந்துள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்

Next Story