மாநில செய்திகள்

விருதுநகர், மதுரையில் ரூ.36 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் புழக்கத்தில் விட முயன்ற 6 பேர் கைது + "||" + 6 arrested for counterfeit money laundering

விருதுநகர், மதுரையில் ரூ.36 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் புழக்கத்தில் விட முயன்ற 6 பேர் கைது

விருதுநகர், மதுரையில் ரூ.36 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் புழக்கத்தில் விட முயன்ற 6 பேர் கைது
விருதுநகர் மற்றும் மதுரையில் ரூ.36 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இதனை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற 6 பேரை கைது செய்தனர்.
விருதுநகர்,

விருதுநகர் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் அப்துல்காதர் (வயது 52). இவர் மூளிப்பட்டி அரண்மனை அருகே தீபாவளியையொட்டி சாலையோர துணிக்கடை போட்டு இருந்தார். இவரது கடைக்கு துணிகள் வாங்க வந்த வாலிபர் ஒருவர் ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்தார். அந்த நோட்டை பார்த்து சந்தேகம் அடைந்த அப்துல்காதர் வேறு ரூபாய் நோட்டை தரும்படி கேட்டார். இதனால் அந்த வாலிபருக்கும், அப்துல்காதருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து அவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு ஒன்று, ரூ.500 கள்ள நோட்டு-2, ரூ.200 கள்ள நோட்டு-1 ஆகியவை இருந்தது.

போலீசாரின் விசாரணையில் அவர் விருதுநகர் அருகில் உள்ள செவல்பட்டியை சேர்ந்த கோபிநாத் (26) என தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் அவருடன் வந்த சூர்யா (27) என்பவரும் போலீசாரிடம் சிக்கினார்.

இவர்கள் இருவரும் செவல்பட்டியை சேர்ந்த முருகன் (32) என்பவர் தங்களுக்கு கள்ளநோட்டுகளை கொடுத்ததாக தெரிவித்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் முருகன் தனக்கு கொக்கலாஞ்சேரியை சேர்ந்த திருவாசகம் (37) என்பவரும், திருவாசகம் தனக்கு எரிச்ச நத்தத்தைச் சேர்ந்த ராஜகோபால் (42) என்பவரும் கள்ள நோட்டுகளை தந்ததாகவும் கூறினர்.

இந்த சங்கிலித் தொடர் விசாரணையின் இறுதியில் போலீசார் மதுரை மாவட்டம் துவரிமானை சேர்ந்த இளங்கோவின் (52) வீட்டுக்குச் சென்றனர். அவருடைய வீட்டில் சோதனையிட்டபோது அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.36 லட்சத்து 800-க்கான ரூ.2 ஆயிரம், ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 ஆகிய கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் பிரிண்டர், கலர் மை பாட்டில்கள், கண்ணாடி மற்றும் 4 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

இளங்கோவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-

சென்னையை சேர்ந்த முருகேசன், வீரபத்திரன் ஆகிய 2 பேரும் தன்னிடம் ரூ.30 ஆயிரம் கொடுத்தால் இரிடியம் உலோகம் தருவதாகவும், அதனை அதிக விலைக்கு விற்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.30 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மதுரையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதனால் ராஜகோபாலுடன் சேர்ந்து இரிடியம் தருவதாக கூறியவர்களைத் தேடி அலைந்தேன். அது பயன் இல்லாமல் போகவே கள்ளநோட்டு அச்சடிக்க முடிவு செய்தேன்.

இதற்காக மதுரையில் உள்ள ஒரு கடையில் ரூ.6 ஆயிரத்துக்கு கம்ப்யூட்டர் பிரிண்டர் வாங்கி கள்ளநோட்டு அச்சடிக்க தொடங்கினேன். அவற்றை புழக்கத்தில் விடுவதற்கு ராஜகோபாலை பயன்படுத்திக்கொண்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விருதுநகர் போலீசார் கோபிநாத், சூர்யா, முருகன், திருவாசகம், ராஜகோபால், இளங்கோ ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.