ஏ.ஆர். முருகதாஸ் கைது வதந்தி - காவல்துறை விளக்கம்


ஏ.ஆர். முருகதாஸ் கைது வதந்தி - காவல்துறை விளக்கம்
x
தினத்தந்தி 8 Nov 2018 6:48 PM GMT (Updated: 8 Nov 2018 6:48 PM GMT)

ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய போலீசார் வந்திருப்பதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்வீட் செய்திருந்த நிலையில், அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை,

நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தில் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது மற்றும் படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற்பெயரை சூட்டியது  அதிமுகவினரை கோபம் அடைய செய்துள்ளது. அதிமுக அமைச்சர் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

அதேசமயம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சர்கார் திரைப்படத்தின் பேனர்களையும், கட் அவுட்டுகளையும் சேதப்படுத்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு நாளை பிற்பகல் படம் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று இரவு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸை கைது செய்வதற்காக அவர் வீட்டிற்கு போலீசார் சென்றதாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் டுவிட்டரில் பதிவிடப்பட்டது.

இதற்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்காக செல்லவில்லை எனவும், வழக்கமான ரோந்து பணிகளுக்காகவே சென்றதாகவும் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலிகிராமத்தில் உள்ள முருகதாஸ் வீட்டிற்கு இயக்குனர்  சங்கத்தலைவர் விக்ரமன் வருகை தந்தார்.

காவல் துறையினர் தனது வீட்டின் கதவை பலமுறை தட்டியாகவும், நான் தற்போது வீட்டில் இல்லை எனவும், தற்போது எந்த காவலரும் தனது வீட்டின் முன்பு இல்லை என ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Next Story