டாஸ்மாக் கடையை 2 மணி நேரம் மட்டும் திறக்க உத்தரவிட வேண்டும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்


டாஸ்மாக் கடையை 2 மணி நேரம் மட்டும் திறக்க உத்தரவிட வேண்டும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Nov 2018 9:30 PM GMT (Updated: 8 Nov 2018 7:22 PM GMT)

பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கியது போல் டாஸ்மாக் கடையை 2 மணி நேரம் மட்டும் திறக்க உத்தரவிட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவ பெருமாள் கோவிலில் அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் மாலை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். கோவில் அருகே புனித குளத்தின் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் கோவில் குளத்தில் இறங்கி வெல்லம் கரைத்து வழிபட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பழமை வாய்ந்த வீரராகவ பெருமாள் கோவிலில் வழிபாடு செய்தது மனநிறைவை தருகிறது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு விரைவில் நல்லாட்சி வரவேண்டும். ஏனென்றால் எந்த ஒரு கோரிக்கையை வைத்தாலும் அதை நிறைவேற்ற நிதி வேண்டும். தமிழ்நாட்டில் கஜானா காலி என்று சொல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை 1 மணிநேரம், மாலை 1 மணிநேரம் என 2 மணி நேரம் நிர்ணயித்தது போல டாஸ்மாக் கடையையும் காலை 1 மணிநேரம் மாலை 1 மணிநேரம் என்று 2 மணி நேரம் மட்டும் திறக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

அவ்வாறு ஒதுக்கினால் அது வரவேற்க தக்க விஷயம். டெல்லி மற்றும் மாசு உள்ள இடத்தில் அதனை நடைமுறை படுத்தலாம். ஆனால் தமிழ்நாட்டில் காற்று மாசு என எந்த மாசும் இல்லை. அதனால் தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனவே வரும் காலத்தில் நீதியரசர்கள் மக்கள் விரும்பும் ஒரு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். வெறும் பட்டாசு வெடிப்பதால் மட்டும் மாசு ஏற்படாது. குப்பை, கொசுக்கள் இல்லாமல் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு கொசுவை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மர்மம் உள்ளது

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்த போது பல கோடி ரூபாய் பிடிபட்டது. எவ்வளவு பிடிபட்டது என்று பேச யாரும் கிடையாது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள். இது குறித்து அமைச்சரிடம் கேட்டால் மர்ம காய்ச்சல் என்று கூறுகிறார். அவர் ஒரு அமைச்சர் என்பதோடு மட்டுமல்லாமல் அவர் ஒரு டாக்டர் அவரே என்ன காய்ச்சல் என்று கூறாமல் மர்ம காய்ச்சல் என்று கூறுவதில் ஏதோ ஒரு மர்மம் உள்ளது. அவர் அந்த மர்மத்தை விளக்கி கூறி தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் தே.மு.தி.க. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் புஜ்ஜி முரளிகிருஷ்ணன், ஆயில்சரவணன், திருவள்ளூர் நகர செயலாளர் மணிகண்டன், விஜயகாந்த் மன்ற செயலாளர் தியாகராஜன், ஒன்றிய செயலாளர் புதூர் பாலாஜி, கீழானூர் சுந்தர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

பின்னர் அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story