“காய்ச்சலுக்கு சுய மருத்துவம் மேற்கொள்வது நல்லதல்ல” சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்


“காய்ச்சலுக்கு சுய மருத்துவம் மேற்கொள்வது நல்லதல்ல” சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:30 PM GMT (Updated: 8 Nov 2018 8:48 PM GMT)

“காய்ச்சல் வந்ததும் சுய மருத்துவம் மேற்கொள்ளாமல், டாக்டர்களை நாடி சிகிச்சை பெற வேண்டும்”, என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சென்னை, 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் வார்டில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவோர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து அங்குள்ள டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் எல்லா வகை காய்ச்சலுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை பெற்றெடுத்த ஒரு தாய்க்கு, பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்தது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டாக்டர்களின் சிறப்பான சிகிச்சை மூலம் தற்போது அவர் நலமாக இருக்கிறார். இதேபோல சிறப்பான சிகிச்சை முறையை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கிறோம்.

அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை கிடைக்க அரசு உரிய நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. காய்ச்சலும், கடுமையான தொண்டை வலியும் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அரசு மருத்துவமனைக்கோ அல்லது படுக்கை வசதிகள் கொண்ட தனியார் மருத்துவமனைக்கோ சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 70 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி இருக்கிறது. ஒரு நபருக்கு பன்றி காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 33 பேருக்கு பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டு உள்ளன.

அதேபோல கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் ஒரு நபரும், ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் ஒரு நபரும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 7 குழந்தைகளுக்கும் பன்றி காய்ச்சல் உறுதிபடுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உரிய சிகிச்சை மூலம் அனைவருமே நலமாக இருக்கின்றனர்.

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு, நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்கனவே இருக்கும் பட்சத்தில் விளைவு விபரீதமாக வாய்ப்புள்ளது. எனவே நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனையை நாடுவது நல்லது. இது 100 சதவீதம் குணப் படுத்த கூடிய காய்ச்சல் தான். இதற்கான ‘ஒசல்டாமாவீர்’ மாத்திரைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் தயாராக உள்ளன. மேலும் ‘ஒசல்டாமாவீர்’ மாத்திரைகளை இருப்பு வைக்கக்கோரி தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தி உள்ளோம்.

காய்ச்சல் வந்தவுடனே ஒரே நாளில் சரியாகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது சரியல்ல. இந்த சூழ்நிலையில் 5 முதல் 7 நாட்கள் காய்ச்சல் பாதிப்பு இருக்கும். ‘பாராசிட்டமால்’ சிரப் குடிக்கலாம், மாத்திரை சாப்பிடலாம். ஆனால் ‘பாராசிட்டமால்’ ஊசி போடக்கூடாது. ஏனெனில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே ரத்தக்கசிவு இருக்கும். எனவே உடனே சரியாகிவிட வேண்டும் என்று அடிப்படையில் ‘பாராசிட்டமால்’ ஊசி போடுவது நல்லதல்ல.

காய்ச்சல் பாதிப்பு வந்தவுடன் நாட்டு மருந்துகள், கை மருந்து என நாடாமல் தொற்றுநோய்க்கான சவால்கள் உள்ள இந்த நேரத்தில் அரசு மருத்துவமனைகள் அல்லது உரிய தனியார் மருத்துவமனைகளை நாடுவதே நல்லது. இக்கட்டான இந்த சூழ்நிலையில் சுய மருத்துவம் நல்லதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி, கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் இளங்கோ மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.

கஸ்தூரிபாய் மருத்துவமனை

இதைத்தொடர்ந்து சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம், தாய்-சேய் நல மையம், தாய்ப்பால் வங்கி ஆகியவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் தாய்-சேய் நல விழிப்புணர்வு பூங்கா, கண்காட்சி மற்றும் ஆண் மற்றும் பெண் பார்வையாளர்கள் தங்கும் அறைகளை பார்வையிட்டார். ஆஸ்பத்திரியில் குழந்தைகள் காணாமல் போவதை தடுப்பதற்காக தாய் மற்றும் குழந்தையின் கையில் ரேடியோ அதிர்வெண் அடையாள காப்பை அவர் அணிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி ‘டீன்’ டாக்டர் நாராயண பாபு, கஸ்தூரிபாய் அரசு தாய்-சேய் நல ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் விஜயா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Next Story