ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை விவகாரத்தில் கவர்னர் தாமதிக்காமல் முடிவு எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை


ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை விவகாரத்தில் கவர்னர் தாமதிக்காமல் முடிவு எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2018 10:15 PM GMT (Updated: 8 Nov 2018 8:49 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை விவகாரத்தில் கவர்னர் தாமதிக்காமல் முடிவு எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அரசின் பரிந்துரை மீது கவர்னர் மாளிகை இன்று வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழகத்தின் உணர்வு சார்ந்த விவகாரத்தில் மாநில அரசின் பரிந்துரையை மதிக்காமல் கவர்னர் மாளிகை அலட்சியமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் ஜனாதிபதிக்கோ, கவர்னருக்கோ எந்தத் தனி அதிகாரமும் இல்லை; மத்திய அரசோ, மாநில அரசோ அளிக்கும் பரிந்துரைப்படி தான் அவர்கள் முடிவெடுக்க வேண்டும்; கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதற்கான கால அவகாசம் அரசுகளுக்குத் தானே தவிர, ஜனாதிபதிக்கோ, கவர்னருக்கோ அல்ல; அதேபோல் முடிவெடுக்கும் விஷயத்தில் தேவையற்ற காலதாமதம் செய்யக்கூடாது.

கவர்னர் அவமதிப்பு

சுப்ரீம் கோர்ட்டின் இந்த வழிகாட்டுதல்களும், அறிவுரைகளும் 7 தமிழர்களை விடுதலை செய்யும் விவகாரத்திற்கும் பொருந்தும். 7 தமிழர் விடுதலை குறித்து 161-வது பிரிவின்படி மாநில அரசே முடிவெடுக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த 3-வது நாளே தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்துவிட்டது. அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர கவர்னருக்கு வேறு வழியில்லை எனும் போது, 2 மாதங்களாக அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டிருப்பதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கவர்னர் அவமதித்துள்ளார். இது மனித உரிமையை மீறிய செயலாகும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடி வருகின்றனர். அவர்களின் விடுதலை விஷயத்தில் தாமதம் செய்வது மிகப்பெரிய அநீதியாகும். எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் கவர்னர் முடிவெடுத்து அவர்களை விடுதலை செய்ய ஆணையிட வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்களும் தங்கள் கடமை முடிந்ததாகக் கருதி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காமல் கவர்னர் மாளிகைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story