‘அம்மா’ என்ற பெயர் மீது எடப்பாடி பழனிசாமிக்கு தனிப்பட்ட உரிமை எதுவும் இல்லை ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் பதில் மனு


‘அம்மா’ என்ற பெயர் மீது எடப்பாடி பழனிசாமிக்கு தனிப்பட்ட உரிமை எதுவும் இல்லை ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் பதில் மனு
x
தினத்தந்தி 8 Nov 2018 8:54 PM GMT (Updated: 8 Nov 2018 9:03 PM GMT)

‘அம்மா’ என்ற பெயர் மீது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட உரிமையை பெற்றிருக்கவில்லை என்று ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் டி.டி.வி.தினகரன், ‘அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அந்த கட்சியின் கொடியாக, கருப்பு, வெள்ளை, சிவப்பு. அதற்கு மத்தியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் படம் அச்சிடப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘அம்மா என்ற வார்த்தையையும், கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியையும் பயன்படுத்த டி.டி.வி.தினகரனுக்கு உரிமை இல்லை’ என்று கூறியிருந்தார்.

வித்தியாசம்

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி.தினகரன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் கொடியில் மத்தியில் அறிஞர் அண்ணாவின் படம் அச்சிடப்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் கொடியில் ஜெயலலிதாவின் படம் உள்ளது. இதனால், இரு கொடிகளும் ஒரேவிதமாக இல்லை. இந்த கொடிகளுக்கு இடையே வித்தியாசம் உள்ளது. எங்கள் கொடியை பார்த்து அ.தி.மு.க. கொடி என்று மக்கள் குழப்பம் அடைய வாய்ப்பே இல்லை. மனுதாரரின் இந்த கோரிக்கையை ஏற்க முடியாது.

கட்சி இல்லை

மேலும் அம்மா என்பது பொதுவான பெயர். அம்மா என்ற வார்த்தைக்கு மனுதாரர் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் எந்த ஒரு உரிமத்தையும் பெற்றிருக்கவில்லை. அரசியல் தலைவர்கள் மீது தனிப்பட்ட உரிமையை ஒரு குறிப்பிட்ட கட்சி கோரமுடியாது. அரசியல் தலைவர்களை, ஒரு குறிப்பிட்ட கட்சியின் சொத்தாகவும் கருத முடியாது. அதுமட்டுமல்ல அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை அரசியல் கட்சியாக நாங்கள் பதிவு செய்யவில்லை. ஏன் என்றால், மறைந்த ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் பலர் என்னை ஆதரிக்கின்றனர். இப்போது ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு யார்? என்பது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதனால், வாரிசு யார் என்பது முடிவாகும் வரை இடைக்காலமாக இந்த அமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

தள்ளிவைப்பு

எனவே, ஜெயலலிதாவின் படம் மற்றும் பெயரை பயன்படுத்துவதை தடுத்தால், அது எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்துக்கு எந்த கட்சியும் ஏகபோக உரிமை கோரமுடியாது. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Next Story