மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை?ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீல் விளக்கம் + "||" + What is the ban on local elections?

உள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை?ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீல் விளக்கம்

உள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை?ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீல் விளக்கம்
உள்ளாட்சி தேர்தலை நடத்த எது தடையாக உள்ளது? என்ற ஐகோர்ட்டின் கேள்விக்கு, மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீல் நேற்று விளக்கம் அளித்தார்.
சென்னை,

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-ம் ஆண்டு நவம்பவர் 17-ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அமல்படுத்தவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் மீது தி.மு.க. சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தேர்தலுக்கு தடை எது?

அப்போது நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடும் செய்யவில்லை. அந்த உத்தரவுக்கு தடையும் பெறவில்லை. தற்போதுள்ள சூழலில் உள்ளாட்சி தேர்தலை நடத்த எது தடையாக உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.துரைசாமி பதில் அளிக்கையில், ‘ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதற்காகவே காலஅவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

வார்டு மறுவரையறை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை’ என்றார்.

தள்ளிவைப்பு

தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘உள்ளாட்சி தேர்தலை நடத்த எந்த சட்டமும் தடையாக இல்லை. இந்த அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால், இனியும் தேர்தலை நடத்த அக்கறை காட்டமாட்டார்கள்’ என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.