2 வாரத்தில் ரூ.54 குறைந்தது சென்னையில் கோழி விலை பெரும் சரிவு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அதிகரிக்க வாய்ப்பு


2 வாரத்தில் ரூ.54 குறைந்தது சென்னையில் கோழி விலை பெரும் சரிவு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அதிகரிக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 11:00 PM GMT (Updated: 8 Nov 2018 9:21 PM GMT)

சென்னையில் கோழி விலை பெரும் சரிவடைந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது விலை உயர வாய்ப்புள்ளது.

சென்னை, 

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை வந்தததால், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி வியாபாரம் எதிர்பார்த்த அளவு இல்லாமல் இறைச்சி வியாபாரிகள் ஏமாற்றம் அடைத்தனர்.

இந்தநிலையில் கந்த சஷ்டி விரதம் தொடங்கி உள்ளதால் இறைச்சி வியாபாரம் மேலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை கோழி விற்பனையாளர் சங்கத்தின் பொருளாளர் மேகநாதன் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் கோழி இறைச்சி பயன்பாடு வெகுவாக குறைந்தது.

தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் மகாவீர் ஜெயந்தி வந்ததால், அன்றைய தினம் இறைச்சி விற்பனை நடைபெறவில்லை. தற்போது கந்த சஷ்டி விரதம் தொடங்கி உள்ளது. இதனால் கோழி விலையில் சரிவு காணப்பட்டுள்ளது.

அதன்படி 9-ந்தேதி(இன்று) உயிருடன் கூடிய ஒரு கோழி விலை 84 ரூபாயாக குறைந்துள்ளது. விரைவில் கார்த்திகை மாதம் பிறக்க இருக்கிறது. அய்யப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்குவார்கள். எனவே இறைச்சி விற்பனை மந்தமாக இருக்கும். இதனால் கோழி இறைச்சி விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கோழி இறைச்சி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.54 குறைந்தது

சென்னையில் கடந்த மாதம் 25-ந்தேதி உயிர் கோழி 138 ரூபாயாக இருந்தது. பின்னர் தினமும் படிப்படியாக விலை குறைந்து வந்தது. அதன்படி நேற்று முன்தினம் ரூ.94-க்கு விற்பனையானது. இந்தநிலையில் கோழி விலை நேற்று 10 ரூபாய் குறைந்து, ரூ.84-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2 வாரத்தில் மட்டும் கோழி விலை 54 ரூபாய் குறைந்துள்ளது.

உயிர் கோழி இறைச்சி கடைகளுக்கு விற்பனை செய்யப்படுகிற போது, சில்லரை விலையில் சற்று கூடுதலாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story