“இலவசம் தவறு என்றால் சினிமாவுக்கு ஏன் வரிவிலக்கு கேட்கிறார்கள்?” டி.டி.வி.தினகரன் கேள்வி


“இலவசம் தவறு என்றால் சினிமாவுக்கு ஏன் வரிவிலக்கு கேட்கிறார்கள்?” டி.டி.வி.தினகரன் கேள்வி
x
தினத்தந்தி 8 Nov 2018 10:30 PM GMT (Updated: 8 Nov 2018 9:33 PM GMT)

‘சர்கார்’ படத்தில் விலையில்லா பொருட்கள் வழங்கியதை விமர்சிப்பவர்கள், சினிமாவுக்கு மட்டும் ஏன் வரிவிலக்கு கேட்கிறார்கள்? என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘சர்கார்’ படம் வியாபார நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படம். மக்களுக்கு கருத்துகளை சொல்வதற்காக எடுக்கப்பட்ட ‘டாக்குமென்ட்ரி’ படம் கிடையாது. நடிகர்-நடிகைகளும் சம்பளம் வாங்கிதான் நடித்திருப்பார்கள்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில் ‘சர்கார்’ படத்தை வெளியிட்டிருந்தால் படக்குழுவினரை பெரிய வீரர்கள் என கருதலாம். இந்த படமும் மற்ற படங்களை போல தான் ஓடும். ஆனால் இவர்களே இந்த படத்துக்கு விளம்பரம் தேடும் வகையில் சிலவற்றை செய்திருக்கிறார்கள். தலைவர்களை பற்றி, அதுவும் அவர்கள் உயிருடன் இல்லாத சூழ்நிலையில் திரைப்படம் எடுப்பது எப்படி நாகரிகமான செயலாகும்? என்பது எனக்கு தெரியவில்லை.

நடிகர்கள் உள்பட எல்லோரும் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது தவறு கிடையாது. இந்தியா வளர்ச்சியடைந்த நாடு கிடையாது. இன்னும் வறுமைக்கோட்டுக்கு கீழே ஏராளமானோர் உள்ளனர். ‘விலையில்லா பொருட்கள் தவறு’, என்று நினைத்தால் எல்லா நடவடிக்கைகளையும் சினிமாவில் காட்டியிருக்க வேண்டுமே...

மாணவர்களுக்கு சைக்கிள், கல்வி உதவித்தொகை, லேப்-டாப், பஸ்பாஸ் வழங்கப்படுகிறது. ஏழை மக்களுக்கு இதெல்லாம் தேவையான திட்டங்கள் தான். மதிய உணவும் அப்படித்தானே வழங்கப்படுகிறது. மிக்சி, கிரைண்டர் என பயனான பொருட்களை மக்களுக்கு வழங்கியது தவறா? எல்லாமே இலவசம் என்றால், இலவசம் தவறு என்றால் சினிமாவுக்கு ஏன் வரிவிலக்கு கேட்கிறார்கள்? அவர்களின் அறிவு அவ்வளவு தான். இவர்களுக்கு வியாபார நோக்கம் மட்டுமே இருக்கும்.

எல்லாவற்றையும் விமர்சிப்பதாக இருந்தால் இலவச டி.வி.க்களையும், அதில் ஒட்டியிருந்த படத்தையும் எரிப்பது போல காட்டியிருக்க வேண்டும். இதில் நடுநிலையும் இல்லை. வியாபார நோக்கம் மட்டுமே இப்படத்தில் உண்டு. மேலும் அரசியலுக்கு எப்படியாவது வரவேண்டும் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களது புரிதல் அவ்வளவுதான்.

‘50 ரூபாய் டிக்கெட் ரூ.2 ஆயிரம் வரை ‘பிளாக்’கில் விற்பனை ஆகிறதே’, என்ற கேள்விக்கு நடிகர் ஒருவர், ‘ரசிகர்களால் வாங்க முடிகிறது, வாங்குகிறார்கள்’, என்று பதில் அளித்திருக்கிறார். கள்ளத்தனமாக விற்பனையாகும் சினிமா டிக்கெட்டுகளுக்கு என்ன வரி விதிக்கப்படுகிறது? இலவசங்களை எதிர்ப்பவர்கள் சினிமாவிலும் அதனை தவிர்த்து விட முடியுமா?

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி கண்டிருக்கிறது. நாட்டில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்கு சென்று விட்டது. கருப்பு பணம் எவ்வளவு ஒழிந்தது என்பதை அரசு தான் சொல்லவேண்டும்.

இந்திய பொருளாதாரம் 50 சதவீதம் வரை பணமாக புழங்கக்கூடியது தான். இதை எப்படி கருப்பு பணம் சென்று சொல்ல முடியும்? எனவே இந்த நடவடிக்கை தோல்வி தான். மக்களுக்கு பாதிப்பு தான். எனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டு வரப்பட்ட தினத்தை ஒரு கருப்பு தினமாகவே கருதமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story