மாநில செய்திகள்

சென்னையில் தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம்நடிகர் விஜய் பேனர்களை கிழித்ததால் பரபரப்பு + "||" + Before the theaters in Chennai The struggle of the AIADMK

சென்னையில் தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம்நடிகர் விஜய் பேனர்களை கிழித்ததால் பரபரப்பு

சென்னையில் தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம்நடிகர் விஜய் பேனர்களை கிழித்ததால் பரபரப்பு
‘சர்கார்’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் சென்னையில் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
சென்னை,

நடிகர் விஜயின் ‘சர்கார்’ படத்துக்கு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனே நீக்க வேண்டும் என்று நேற்று பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடத்தினார்கள்.

சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள காசி தியேட்டர் முன்பு தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு நூற்றுக்கணக்கான அ.தி.மு.க.வினர் குவிந்தனர்.

அவர்கள் அனைவரும் சர்கார் படத்துக்கு எதிராகவும், அந்த திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கதாநாயகன் நடிகர் விஜய்க்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறும், படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை அகற்றாவிட்டால் போராட்டம் தீவிரம் ஆகும் என்று எச்சரிக்கை விடுத்தபடியும் இருந்தனர்.

அப்போது திடீரென்று அ.தி.மு.க.வினர் தியேட்டர் முன்பு செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டு இருந்த நடிகர் விஜய்யின் பேனர்கள், கட்-அவுட்டுகளை கட்டையை கொண்டு தாக்கி, கிழிக்க முயற்சித்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு இருந்த விஜய்யின் ரசிகர்கள் தாங்களாகவே அந்த பேனர்களை அகற்றிவி டுவதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் போலீசாரின் தடுப்பை மீறி அ.தி.மு.க.வினர் அங்கிருந்த பேனர்கள், கட்-அவுட்டுகள் மீது ஏறி ஆவேசமாக கிழித்தனர். இந்த சம்பவம் நடைபெற்று கொண்டு இருந்த போது தியேட்டரில் மதிய காட்சி ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது.

கலைந்து சென்றனர்

மதிய காட்சி முடிந்து பொதுமக்கள் வெளியே வரும் நிலையில் அ.தி.மு.க.வினர் தீவிரமாக போராட்டம் நடத்தியதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதையடுத்து போலீசார் அ.தி.மு.க.வினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

படம் முடிந்து பொதுமக்கள் வெளியே வரும்போது இப்படி போராட்டம் நடத்தினால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்றும், இதனால் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் போலீசார் அ.தி.மு.க.வினரிடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சென்னை மற்றும் புறநகர் தியேட்டர்கள்

சென்னை அமைந்தகரையில் ‘ஸ்கை வாக்’ வணிக வளாகத்தில் உள்ள பி.வி.ஆர். தியேட்டரில் சர்கார் படம் திரையிடப்பட்டு வருகிறது. படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர்.விஜயகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் வணிக வளாகத்துக்குள் நுழைத்து போராட்டம் நடத்த முயற்சித்தனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். அதன்பேரில் அங்கிருந்து அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இதேபோல், அசோக்நகர் உதயம் தியேட்டர், அண்ணாசாலை தேவி தியேட்டர், ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டர் என சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம்

தாம்பரத்தில் உள்ள நேஷனல் தியேட்டரில் காஞ்சீபுரம் கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்ட அ.தி.மு.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், தியேட்டரில் இருந்த விஜய் பட பேனர்களை உடைத்தும், கிழித்தும் போட்டு விட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் முன்பும் அ.தி.முக.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி இங்கு இரவுக் காட்சி ரத்து செய்யப் பட்டது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள நாதமுனி மற்றும் ஏ.ஜி.எஸ். தியேட்டர்களில் இருந்த விஜய்பட கட்-அவுட், பேனர்களை போலீஸ் அறிவுரையின்படி தியேட்டர் நிர்வாகமே அகற்றிவிட்டது. மேலும் தியேட்டர்களில் முகப்பு விளக்குகள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

பரங்கிமலை

பரங்கிமலை ஜோதி தியேட்டரில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வி.என்.பி.வெங்கட்ராமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஒரு பிரிவினராகவும், நங்கநல்லூர் கட்டிட கூட்டுறவு சங்க தலைவர் பரணிபிரசாத், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் வைரமுத்து ஆகியோர் தலைமையில் மற்றொரு பிரிவாகவும் அ.தி.மு.க.வினர் 2 பிரிவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தியேட்டர் நிர்வாகமே அங்கிருந்த விஜய் பேனர்களை அகற்றி விட்டனர். இதையொட்டி தியேட்டர் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.