‘சர்கார்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர்களுக்கு பூட்டு போட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம்


‘சர்கார்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர்களுக்கு பூட்டு போட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2018 11:15 PM GMT (Updated: 8 Nov 2018 10:02 PM GMT)

‘சர்கார்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் 2 தியேட்டர்களுக்கு பூட்டு போட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படத்திற்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரத்தில் உள்ள தியேட்டரில் நேற்று, மாலை காட்சி ஓடிக் கொண்டிருந்தபோது அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அந்த தியேட்டரின் கதவை இழுத்து மூடி பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த பூட்டை போலீசார் திறந்து விட்டனர்.

இதேபோல் மற்றொரு தியேட்டரின் கதவுக்கும் பூட்டு போட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். உடனே போலீசார் விரைந்து சென்று அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.

இதேபோல் கோவையில் உள்ள ஒரு தியேட்டரில் விஜய் பேனரை அ.தி.மு.க.வினர் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மற்றொரு தியேட்டரில் படக்காட்சியை நிறுத்துமாறு அக்கட்சியினர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் ‘சர்கார்’ படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதால், மதிய காட்சி ரத்து செய்யப்பட்டது.

ஊட்டியில் நடிகர் விஜய் உருவபொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியிலும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்திய அ.தி.மு.க.வினர் அங்கிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர். திருவாரூரில் போராட்டம் காரணமாக இரவு காட்சி ரத்து செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் தியேட்டர் முன்பு இருந்த பேனர்களை அ.தி.மு.க.வினர் கிழித்தனர். நெல்லையில் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Next Story