மாநில செய்திகள்

‘சர்கார்’ படம் நிகழ்கால அரசியல் குறித்தது தான்:“நடிகர் விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார்”பழ.கருப்பையா பேட்டி + "||" + Paza Karuppaiya Interview

‘சர்கார்’ படம் நிகழ்கால அரசியல் குறித்தது தான்:“நடிகர் விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார்”பழ.கருப்பையா பேட்டி

‘சர்கார்’ படம் நிகழ்கால அரசியல் குறித்தது தான்:“நடிகர் விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார்”பழ.கருப்பையா பேட்டி
‘சர்கார்’ படம் நிகழ்கால அரசியல் குறித்தது தான் என்றும், நடிகர் விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார் என்றும் பழ.கருப்பையா தெரிவித்தார்.
சென்னை,

‘சர்கார்’ படத்தில் நடித்தவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழ.கருப்பையா சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘சர்கார்’ படத்தில் வரும் காட்சிகளை தணிக்கை குழு அனுமதித்து வெளிவந்துவிட்ட பிறகு, ஒவ்வொருவரும் இதை நீக்கு, அதை நீக்கு என்று சொன்னால், தணிக்கை குழுவுக்கு வேலையே இல்லை. இத்தனை பேரிடம் ஓட்டெடுப்பு நடத்தி ஒரு படத்தை வெளியிட முடியாது. அந்த படத்தில் என்னுடைய வார்த்தைகள் கூட ஒடுக்கப்பட்டு இருக்கிறது.

எல்லோரையும் குறிப்பிட்டு கேலி செய்கின்ற போக்கு ‘சர்கார்’ படத்தில் இருக்கிறது. இன்றைய அரசியலே அத்தகையது தான் என்பது போல அதில் இடம் பெற்று இருக்கும். ஒவ்வொரு வசனத்தையும் நீக்குவோம் என்று சொல்வதை விட, படத்தையே நீக்குங்கள் என்று சொல்ல வேண்டும்.

நிகழ்கால அரசியல் குறித்தது

‘சர்கார்’ படம் முழுவதும் நிகழ்கால அரசியல் குறித்தது தான். நிகழ்கால அரசியல் மதிக்கத்தக்கதாக இருக்கிறதா? இலவசம் மூலம் தான் நடத்துகிறார்கள். கமிஷன் வாங்காத, ஊழல் செய்யாத ஒரு துறையும் கிடையாது. மணலை கூட இறக்குமதி செய்யும் அளவுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

ஊழலை ஒழிப்பதற்காக தான் இந்த சர்கார் படம் வந்து இருக்கிறது. இயக்குனர் எந்த ஒரு கட்சிக்கும் சார்பாக கதை எழுதவில்லை. மொத்த ஊழலையும் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

மெர்சல் படத்தை பா.ஜ.க. எப்படி பெரிய அளவில் வெற்றிக்கு கொண்டு சென்றதோ? அதேபோல, ‘சர்கார்’ படத்தை மாநிலத்தின் அமைச்சர்கள் பெரிய அளவில் வெற்றிக்கு கொண்டு செல்வார்கள்.

காலத்தின் தேவை

காமராஜர் கல்வியை வளர்க்க சில இலவசங்களை செய்தார். அது நாட்டுக்கு அவசியம். இன்றியமையாதது. ஆனால் இன்று கொடுக்கப்படும் இலவசங்களோ அன்றன்றைக்கு மட்டும் தான் பயன்படுமே தவிர, நிலையாக மேலெழுந்து வருவதற்கும், நாடு சரியான கட்டமைப்பை பெறுவதற்கும் பயன்படாது. ஆக்கப்பூர்வமானதை செய்ய வேண்டும்.

‘சர்கார்’ படம் காலத்தின் தேவை. இந்த படத்தில் எல்லா கட்சிகளும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கின்றன. ஆனால் அதில் தலைமையாக அ.தி.மு.க. தெரிகிறது என்றால் அது உங்கள் பார்வை.

விஜய் அரசியலுக்கு வருவார்

நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். அவருடன் இந்த படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் ஒரு உறுதி இருக்கிறது. தான் அளப்பரிய அன்பு செலுத்தும் இந்த உலகத்துக்கு திரும்ப ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னிடம் சொன்னார். இப்போது வருவாரா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் உறுதியாக அரசியலுக்கு வருவார்.

நல்ல கருத்தை உள்வாங்கி நடிகர் பேசினால் லட்சம் பேருக்கு அது சென்றடையும். அது நல்லது தானே. ஊழலை ஒழிக்க வேண்டும் என்று எந்த நடிகர் சொன்னாலும் அது நல்லது தான். உண்மையிலேயே ரஜினி ஊழலை ஒழித்துவிட்டால், அவர் ஆட்சிக்கு வராவிட்டாலும், வாழ்வின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று நான் சொல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.