அ.தி.மு.க.வினர் 2-வது நாளாக போராட்டம்! பல்வேறு நகரங்களில் சர்கார் படத்தின் காலை காட்சிகள் ரத்து


அ.தி.மு.க.வினர் 2-வது நாளாக போராட்டம்! பல்வேறு நகரங்களில் சர்கார் படத்தின் காலை காட்சிகள் ரத்து
x
தினத்தந்தி 9 Nov 2018 5:41 AM GMT (Updated: 9 Nov 2018 5:41 AM GMT)

அ.தி.மு.க.வினர் 2-வது நாளாக போராட்டம். பல்வேறு நகரங்களில் சர்கார் படத்தின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

அ.தி.மு.கவினர் 2-வது நாளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் சர்கார் படத்தின் காலை காட்சிகள் பல்வேறு நகரங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தஞ்சையில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள சாந்தி திரையரங்கு முன்பு அ.தி.மு.கவினர் காலையிலேயே திரண்டனர். ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையிலான காட்சி மற்றும் இலவச பொருட்களுக்கு எதிரான காட்சியை நீக்கும் வரை சர்கார் படத்தை திரையிடக்கூடாது என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனை அடுத்து காலை காட்சியை ரத்து செய்வதாக சாந்தி திரையரங்க நிர்வாகம் அறிவித்தது. இதே போல் தஞ்சையில் ஜூபிடர் திரையரங்கிலும் சர்கார் காலை காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்திலும் அ.தி.மு.கவினர் கார்த்திகேயன் மற்றும் பாபு திரையரங்கு முன்பு திரண்டு சர்கார் திரைப்படத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

சர்கார் படத்திற்கு அனுமதியின்றி பேனர் வைத்ததாக தஞ்சை - 25 பேர், திருவாரூர் - 24 பேர், நாகை - 20 பேர், கரூர் - 10, திருச்சி - 4 பேர், புதுக்கோட்டை - 4 பேர் என மொத்தம் 87 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story