சர்கார் : சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி மறுதணிக்கை


சர்கார் : சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி மறுதணிக்கை
x
தினத்தந்தி 9 Nov 2018 10:21 AM GMT (Updated: 9 Nov 2018 10:21 AM GMT)

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கி மறுதணிக்கை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.

சென்னை,

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் கோமளவல்லி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சங்கம் ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள கோமளவல்லி என்று அழைக்கப்படும்  ஆடியோவை மியூட் செய்தும் , தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறி மிக்சி, கிரைண்டர் தீ வைக்கப்படும் 5 நொடி காட்சியை நீக்கி தணிக்கை குழுவினர்  மறு தணிக்கை செய்து உள்ளனர்.

மறு தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மறு தணிக்கை செய்யப்பட்ட 'சர்கார்' படம் இன்று மாலை திரையரங்குகளில் திரையிடப்படும்.

சர்கார் பட விவகாரம் தொடர்பாக  செய்தித்துறை அமைச்சர்  கடம்பூர் ராஜூ   முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதால்  சர்கார் பிரச்சினை முடிந்தது என்று  கூறியுள்ளார். 

Next Story