பா.ஜனதாவுக்கு எதிராக கூட்டணி மு.க.ஸ்டாலினுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு


பா.ஜனதாவுக்கு எதிராக கூட்டணி மு.க.ஸ்டாலினுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
x
தினத்தந்தி 9 Nov 2018 2:08 PM GMT (Updated: 9 Nov 2018 2:08 PM GMT)

பா.ஜனதாவுக்கு எதிராக கூட்டணி அமைக்க முயற்சிக்கும் சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.


சென்னை, 


கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகித்தது. ஆனால், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று கூறி பா.ஜ.க. கூட்டணியை விட்டு தெலுங்கு தேசம் கட்சி வெளியே வந்தது. தற்போது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார்.
கடந்த வாரம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்தார். நேற்று மாலை மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவேகவுடாவை அவர் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு சந்திரபாபு நாயுடு சென்றார். அவரை ஸ்டாலின் வரவேற்றார்.  எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு பகுதியாக சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Next Story