வனவர் பதவிக்கு தேர்வு 25-ந் தேதி தொடங்குகிறது: 1,178 பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டி


வனவர் பதவிக்கு தேர்வு 25-ந் தேதி தொடங்குகிறது: 1,178 பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டி
x
தினத்தந்தி 9 Nov 2018 9:14 PM GMT (Updated: 9 Nov 2018 9:14 PM GMT)

வனவர் பதவிக்கு தேர்வு வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. 1,178 பணியிடங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்கான ஹால்டிக்கெட் வருகிற 18-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சென்னை, 

300 வனவர், 878 வனக்காப்பாளர் என மொத்தம் 1,178 பதவிக்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதற்காக விண்ணப்பிக்கும் கடைசி தேதி கடந்த 5-ந் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் இந்த பணிகளுக்கான இணைய வழி தேர்வு எப்போது? என்பது குறித்து தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வுக்குழும உறுப்பினர் செயலர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

‘ஹால் டிக்கெட்’

வனவர் பதவிக்கான இணையவழி தேர்வு வருகிற 25, 26, 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. அதேபோல், வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான இணையவழி தேர்வு வருகிற 29, 30-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை(ஹால் டிக்கெட்) 18-ந் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வனவர், வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளருக்கான மாதிரி, பயிற்சி தேர்வுகளை இன்று(சனிக்கிழமை) முதல் www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதவிக்கு 180 பேர் போட்டி

மொத்தம் உள்ள 1,178 பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 150 மையங்களில் நடக்கிறது.

இந்த தேர்வு எழுதுவதற்கு 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். அந்த வகையில் பார்க்கும்போது, ஒரு பதவிக்கு 180 பேர் போட்டியிடுகின்றனர்.

Next Story