சேலம் தளவாய்பட்டியில் சிறுமி கொலை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் தாயார் கண்ணீர் பேட்டி


சேலம் தளவாய்பட்டியில் சிறுமி கொலை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் தாயார் கண்ணீர் பேட்டி
x
தினத்தந்தி 9 Nov 2018 9:30 PM GMT (Updated: 9 Nov 2018 9:20 PM GMT)

சேலம் மாவட்டம் தளவாய்பட்டியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க கூறினார்.

சென்னை, 

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தளவாய்பட்டியைச் சேர்ந்த சாமிவேல்- சின்னப்பொண்ணு தம்பதியரின் மகள் ராஜலட்சுமி (வயது 12).

இந்த சிறுமி, தன் வீட்டில் குடிநீர் குழாய் இல்லாத நிலையில், பக்கத்து வீடான தினேஷ்குமார் (25) என்பவருடைய வீட்டுக்கு தண்ணீர் எடுக்க செல்வது வழக்கம். அப்போது அந்த சிறுமியை தினேஷ்குமார் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 22-ந் தேதியன்று ராஜலட்சுமியை, தினேஷ்குமார் அவரது வீட்டுக்குள் புகுந்து சிறுமியின் தாயார் கண் எதிரில் தலையை துண்டித்து கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் தினேஷ்குமார் மீது போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக சிறுமி ராஜலட்சுமி குடும்பத்தினர் சென்னையில் நேற்று பெண்கள் அமைப்பினரை சந்தித்துப் பேசினர். பின்னர் சேப்பாக்கத்தில் உள்ள சி.ஐ.டி.யு. தமிழ் மாநில குழு அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தனர்.

ஜாமீன் அளிக்கக்கூடாது

இதுகுறித்து ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் சுகந்தி அளித்த பேட்டி வருமாறு:-

முதல்-அமைச்சரின் மாவட்டமான சேலத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு எம்.பி, எம்.எல்.ஏ. யாரும் உடனே நேரில் சென்று ஆறுதல் சொல்லவில்லை.

இந்தக் கொலை வழக்கின் விசாரணை முடியும் வரை குற்றவாளியை ஜாமீனில் விடக் கூடாது. ராஜலட்சுமி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும். தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். மீ டூ இயக்கத்துக்கு எங்கள் ஆதரவு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

தூக்குத் தண்டனை

அதைத் தொடர்ந்து ராஜலட்சுமியின் மூத்த சகோதரி அருள்ஜோதி, “சம்பவம் நடந்து 2 மணி நேரத்துக்குப் பிறகுதான் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்தனர். வழக்கு பதிவு செய்யும் முன்பே குற்றம்சாட்டப்பட்டவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். கடும் அழுத்தத்திற்கு பிறகுதான் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.

ராஜலட்சுமியின் தாயார் சின்னப்பொண்ணு, “என் மகளைப் போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. அவளை கொலை செய்த குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கவேண்டும். குடிநீர் வசதி இல்லாததால்தான் தினேஷ்குமார் வீட்டுக்குச் சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை, என் மகளுக்கு ஏற்பட்டது” என்று கண்ணீருடன் கூறினார்.

Next Story