மாநில செய்திகள்

அமைச்சர் பாண்டியராஜன் தாக்கல் செய்த மனு தள்ளுபடிஐகோர்ட்டு உத்தரவு + "||" + Minister Pandiarajan filed Petition dismissed

அமைச்சர் பாண்டியராஜன் தாக்கல் செய்த மனு தள்ளுபடிஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் பாண்டியராஜன் தாக்கல் செய்த மனு தள்ளுபடிஐகோர்ட்டு உத்தரவு
தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், ஆவடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் க.பாண்டியராஜன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் நாசர் தோல்வியடைந்தார்.

இதையடுத்து பாண்டியராஜனின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நாசர் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘அமைச்சர் பாண்டியராஜன், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுத்தும், பல முறைகேடுகளை செய்தும் வெற்றி பெற்றுவிட்டார்’ என்று கூறியிருந்தார்.

கொடுத்தது யார்?

இந்த வழக்கை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு விசாரணையின்போது, அமைச்சர் பாண்டியராஜன் மனு தாக்கல் செய்தார். அதில், ‘தனக்கு எதிராக மனுதாரர் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார். பின்னர், அமைச்சர் பாண்டியராஜனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அந்த உத்தரவில், நீதிபதி கூறியிருப்பதாவது:-

தேர்தல் வழக்கில், அமைச்சருக்கு எதிராக தீவிர குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பணம், பரிசுப் பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கி, ஓட்டுக்களை பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த முறைகேடு எந்த தேதியில் நடந்தது?, எங்கு நடந்தது?, எத்தனை மணிக்கு நடந்தது?, ஓட்டுக்காக பணத்தை யார் கொடுத்தது?, அதை யார் வாங்கியது? என்பது உள்ளிட்ட விவரங்களை விவரித்து மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தள்ளுபடி

எனவே, இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவும், அந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதையும் எதிர்மனுதாரர் பாண்டியராஜன் தான் நிரூபிக்கவேண்டும். அதனால், தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற அமைச்சரின் கோரிக்கையை ஏற்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

மேலும், அமைச்சர் பாண்டியராஜன் வெற்றியை எதிர்த்து நாசர் தொடர்ந்த தேர்தல் வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிற்கு இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, பிரதான தேர்தல் வழக்கை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.