மாநில செய்திகள்

“நான் பிரதமர் வேட்பாளர் அல்ல”சந்திரபாபு நாயுடு பேட்டி + "||" + Chandrababu Naidu interview

“நான் பிரதமர் வேட்பாளர் அல்ல”சந்திரபாபு நாயுடு பேட்டி

“நான் பிரதமர் வேட்பாளர் அல்ல”சந்திரபாபு நாயுடு பேட்டி
நாட்டை காப்பாற்றவே அணி திரள்கிறோம் என்றும், ‘நான் பிரதமர் வேட்பாளர் அல்ல’ என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
சென்னை, 

சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி விட்டு வெளியே வந்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனநாயகத்தை காப்பாற்ற மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்தேன். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற துறைகளை மத்திய பா.ஜ.க. அரசு எதிர்க் கட்சியினரை துன்புறுத்தவே பயன்படுத்துகிறது. ரிசர்வ் வங்கி உள்பட எந்த அமைப்பும் பாதுகாப்பாக இல்லை. இந்தியாவில் பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எதுவும் நடக்கவில்லை. இதன்மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை என்று மத்திய நிதி மந்திரி ஒத்துக்கொண்டுள்ளார். அதேவேளையில் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவர் கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறி உள்ளார்.

நாட்டில் ஜனநாயகம் இல்லை. பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற விஜய்மல்லையா, நீரவ்மோடி ஆகியோர் இந்தியாவில் இருந்து தப்பித்து விட்டனர். வாராக்கடனால் பல வங்கிகள் திவால் ஆகி விட்டன. மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.

இந்த நாட்டை பா.ஜ.க. விடம் இருந்து காப்பாற்ற வேண்டியது உள்ளது. இதற் காக பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் கட்சியினரை அணி திரட்டி வருகிறோம். கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்து பேசினேன். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை விரைவில் சந்திக்க உள்ளேன்.

பா.ஜ.க.வுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் ஒற்றுமையாக உள்ளோம். எங்களிடம் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு கருத்து இருந்தாலும் ஜனநாயகத்தையும், நாட்டையும் காப்பாற்றும் எண்ணம் தான் முதன்மையாக இருக்கும்.

இந்த நாட்டை காப்பாற்ற ஒரே எண்ணத்தோடு பயணம் செய்ய முடிவெடுத்துதான் அணி திரண்டு வருகிறோம். என்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை. நான் பிரதமர் வேட்பாளர் அல்ல. எங்கள் அணியில் பலம் வாய்ந்த தலைவர்கள் பலர் உள்ளனர்.

மோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்த நிர்வாகிதான். பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை இணைப்பது மட்டும் தான் எனது பணி. இந்த அணியை யார் வழி நடத்துவார்கள் என்பதை அனைவரும் சேர்ந்து முடிவு செய்வோம்.

தமிழகத்தில் அரசு செயல் படுவதாக தெரியவில்லை. டெல்லியில் இருந்து தான் தமிழகத்தை இயக்குகிறார்கள். அரசியலை தவிர்த்து கிருஷ்ணாநதிநீர், கோதாவரி நீர் ஆகியவற்றை தமிழகத்துக்கு வழங்குவது குறித்தும் மு.க. ஸ்டாலினிடம் பேசினேன்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை