மூளை பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனித்துறையை உருவாக்க வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


மூளை பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனித்துறையை உருவாக்க வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 Nov 2018 9:02 PM GMT (Updated: 10 Nov 2018 9:02 PM GMT)

மூளை பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தனித்துறையை உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தொடர் வலிப்பு மற்றும் மூளை பாதிப்புக்குள்ளாகி படுத்த படுக்கையாக இருந்த தனது 11 வயது மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க கோரி கடலூரைச் சேர்ந்த திருமேணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட மருத்துவர்கள் குழு, சிறுவனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க முடியாது என்று அறிக்கை அளித்தது. இதைத்தொடர்ந்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அனிருதா ஆஸ்பத்திரி நிர்வாகம் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

சிறுவனுக்கு டிரிக்கர் பாயிண்ட் மற்றும் மஸ்குலர் ஸ்கெலிட்டல் தெரபி சிகிச்சை(தசைநார் மற்றும் எலும்பு தூண்டுவித்தல் சிகிச்சை) அளிக்கப்பட்டு வருவதால் அவனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் ஐகோர்ட்டில் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்தது.

சர்வே எடுக்க வேண்டும்

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிறுவனின் தந்தை தரப்பில் ஆஜரான வக்கீல் கவிதா ராமேஷ்வர், திருச்சி மாவட்டத்தில் மட்டும் இதுபோன்ற நோயால் 14 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது;-

மாநில அளவிலும், நாடு முழுவதும் இதேபோன்று எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று மத்திய, மாநில அரசிடம் புள்ளிவிவரங்கள் இல்லை. எனவே, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சர்வே எடுக்க வேண்டும்.

மூளை பாதிப்பால் குறைந்த அளவு பாதிக்கப்பட்ட குழந்தைகள், முழு அளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என தனித்தனியாக மாநில அரசு சர்வே எடுக்க வேண்டும். அப்போது தான் அந்த குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளித்து மறுவாழ்வு கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

தனித்துறை

அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும், மருத்துவமனைகளிலும் பிசியோதெரபி படிக்கும் மாணவர்களுக்கு டிரிக்கர் பாய்ண்ட் மற்றும் மஸ்குலர் ஸ்கெலிட்டல் தெரபி சிகிச்சையை பாடமாக சேர்ப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் மாநில அரசு கொண்டு செல்ல வேண்டும்.

மூளை பாதிப்பால் உறுப்புகள் செயலிழந்துள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் தனித்துறையை உருவாக்க வேண்டும்.

உதவித்தொகை

தாலுகா அளவில் இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பது குறித்து அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை தர நரம்பியல் துறையில் நிபுணர்கள் உள்ளதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாதம் ரூ.15 ஆயிரம் உதவித் தொகை வழங்குவது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு பயிற்சி

மாற்று முறை மருத்துவமான ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதியில் இதற்கான சிகிச்சை உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும்.

டிரிக்கர் பாய்ண்ட் மற்றும் மஸ்குலர் ஸ்கெலிட்டல் தெரபி சிகிச்சை தொடர்பான டிப்ளமோ படிப்புகள் உள்ளதா? என்பதை இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் வெளிநாடுகளிலிருந்து சிறப்பு மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்து இந்திய மாணவர்களுக்கு பயிற்சி தர வேண்டும். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story