மாநில செய்திகள்

ராயக்கோட்டை அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த யானை உயிருடன் மீட்பு + "||" + The fallen elephant in the well Rescue Alive

ராயக்கோட்டை அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த யானை உயிருடன் மீட்பு

ராயக்கோட்டை அருகே
40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த யானை உயிருடன் மீட்பு
40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த யானை உயிருடன் மீட்கப்பட்டது.
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ராயக்கோட்டை அருகே உள்ளது ஊடேதுர்க்கம் காப்புகாடு. இந்த காட்டில் ஏராளமான யானைகள் உள்ளன. நேற்றுமுன்தினம் இரவு 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அருகில் உள்ள உப்புபள்ளம் வழியாக கடூர், தாண்டரகுண்டா, உப்புபள்ளம் பகுதிக்கு வந்தன.

அங்கு விவசாய பயிர்களை யானைகள் மிதித்தும், தின்றும் நாசம் செய்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து பட்டாசுகளை வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை விரட்டினார்கள்.

கிணற்றில் தவறி விழுந்தது

அந்த நேரம் யானைகள் கூட்டத்தில் இருந்து 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று தவறி, அருகில் உள்ள 40 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. அதில் 5 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது. கிணற்றுக்குள் யானை தவறி விழுந்ததும், ஆக்ரோஷத்தில் பிளிறியது. கிணற்றுக்குள் இருந்து வெளியே வர முடியாமல் தண்ணீரில் அங்கும் இங்கும் தத்தளித்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.

உயிருடன் மீட்பு

இதைத்தொடர்ந்து அந்த இடத்துக்கு ராட்சத பொக்லைன் வரவழைக்கப்பட்டது. பின்னர் யானை விழுந்த கிணற்றின் அருகில் பள்ளம் தோண்டப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டது. இரவு 10 மணி அளவில் தொடங்கிய பணி, காலை 6 மணி அளவில் நிறைவடைந்தது. யானை வெளியே வர வழி ஏற்படுத்தப்பட்டதும், யானை அந்த பாதை வழியாக நடந்து கிணற்றில் இருந்து மேலே ஏறி வந்தது.

கிணற்றுக்குள் இருந்து வந்ததும் யானை மகிழ்ச்சியில் சுற்றும், முற்றும் பார்த்து துதிக்கையை தூக்கி பிளிறியபடி ஊடேதுர்க்கம் காட்டை நோக்கி ஓடியது.