மாநில செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு ஜனநாயக படுகொலைதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் + "||" + The Democratic Massacre of the Sri Lankan Parliament Tamil political party leaders condemned

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு ஜனநாயக படுகொலைதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு ஜனநாயக படுகொலைதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயக படுகொலை என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை,

இலங்கை நாடாளுமன்றம் நேற்றுமுன்தினம் இரவு கலைக்கப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் ஜனவரி 5-ந் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று இலங்கை அதிபர் அறிவித்துள்ளார். சிங்கள பேரினவாதத்தின் உச்சகட்ட அராஜகம் மீண்டும் அரங்கேறப் போகிறது. ஈழத் தமிழ் இனத்தையே கருவறுக்க வேண்டும் என்று படுகொலை நடத்திய ராஜபக்சேவை சிங்கள இனவாத வெறியர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.

இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது. ராஜபக்சே கரங்களுக்கு மீண்டும் அதிகாரம் வருமானால், முதல் கட்டமாக ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தனித்தன்மையை அழிக்க கட்டமைத்த கலாசார படுகொலைகள் நடைபெறும். உலக நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா. மன்றத்திலும், மனித உரிமை கவுன்சிலிலும் குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை அதிபர் அங்குள்ள பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை நீக்கிவிட்டு அறுதிபெரும்பான்மை இல்லாத ராஜபக்சேவை நியமித்தது ஜனநாயகத்துக்கு விரோதமாகும். அதோடு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழலில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்து இருப்பது ஜனநாயக படுகொலையாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

உடனடியாக இந்திய அரசு தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கையில் ஜனநாயகம் தழைத்திட இந்திய அரசு விரைவாக முயல வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா, புதிய நாடாளுமன்றத்தை அமைக்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். இந்தத் தேர்தல் நிச்சயமாக நேர்மையாக நடக்காது.

இந்த விஷயத்தில் இந்தியா இனியும் அலட்சியம் காட்டாமல், இலங்கை சிக்கலில் உடனடியாக தலையிட்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டி.டி.வி.தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட செய்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட கொடூர நாட்களின் சுவடுகள் மறைந்து அமைதியான வாழ்வை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.

இனவெறி கொண்ட ராஜபக்சேவுக்கு அதிகாரத்தை கொடுக்க முயற்சிக்கும் இச்செயல், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்திய அரசு இந்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், நலனுக்கும் தீங்கு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய அரசு இதைக் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இனப்படுகொலை குற்றவாளியான ராஜபக்சேவோடு கூட்டு சேர்ந்து கொண்டு சட்டவிரோதமாக இலங்கை அதிபர் செயல்படுவது ஈழத்தமிழர்களுக்கும், இலங்கையின் ஜனநாயகத்துக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் ஜனநாயக படுகொலையைக் கண்டிக்குமாறு இந்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.