பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை: தகுதியற்ற ஆசிரியர், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?


பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை: தகுதியற்ற ஆசிரியர், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
x
தினத்தந்தி 10 Nov 2018 9:25 PM GMT (Updated: 10 Nov 2018 9:25 PM GMT)

தகுதியற்ற ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்பது குறித்து பட்டியல் எடுத்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

சென்னை,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்கள் சிலர் போலியான சான்றிதழ் கொடுத்து பணி செய்வதாகவும், சிலர் உடல்நலிவுற்று பணி செய்ய தகுதியில்லாதவர்களாகி சம்பளம் பெற்றுக்கொண்டு, அந்த இடத்தில் 3-ம் நபர் ஆசிரியர் ஒருவரை குறைந்த சம்பளம் வழங்கி பணி செய்து வருவதாகவும் பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன.

மேலும், சிலர் தொடர் விடுமுறை எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றசாட்டுகள் வந்து இருக்கிறது. அதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து இருக்கிறது. பள்ளி கல்வித்துறை இயக்ககம் அனைத்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தகுதியற்றவர்கள் யார்?

அரசு பள்ளி மற்றும் அதனை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியார்களது பணியினை மறு ஆய்வு செய்து, 25 ஆண்டுகள் பணி முடிந்தும் மற்றும் 50 வயதை கடந்தும் பணிக்குறைபாடு, திறமையின்மை, சிரத்தையின்மை காரணமாக தகுதியற்றவர்கள் யார்? என்பதை பட்டியலாக அரசு, நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் தயார் செய்ய வேண்டும். அப்படி யாரும் இல்லை என்றாலும், ‘இன்மை’ என்று குறிப்பிட வேண்டும்.

அந்த பட்டியலை வருகிற 13-ந் தேதிக்குள் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் பள்ளி மற்றும் ஆய்வு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களை தொகுத்து (பதவி வாரியாக தனித்தனி படிவத்தில்) பூர்த்தி செய்து வருகிற 15-ந் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story