அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்தக்கோரி கவர்னரிடம் விசுவ இந்து பரிஷத் மனு


அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்தக்கோரி கவர்னரிடம் விசுவ இந்து பரிஷத் மனு
x
தினத்தந்தி 10 Nov 2018 9:47 PM GMT (Updated: 10 Nov 2018 9:47 PM GMT)

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு சட்டம் இயற்ற வலியுறுத்த வேண்டும் என்பதற்காக விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் தமிழக கவர்னரிடம் நேற்று மனு கொடுத்தனர்.

சென்னை,

அயோத்தியில் ராமஜென்ம பூமியை இந்துக்களிடம் ஒப்படைத்து, ராமர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் விசுவ இந்து பரிஷத் இணை பொதுச்செயலாளர் ராகவலு, இணைச்செயலாளர் எஸ்.கோபாலரத்தினம், வட தமிழ்நாடு மாநில தலைவர் வாசுதேவன், சென்னை மண்டல செயலாளர் பி.எம்.நாகராஜன், மன்னார்குடி ஜீயர், ராமானந்தா சுவாமிகள் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று சந்தித்து பேசினர்.

பின்னர் தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பன்வாரிலால் புரோகித்திடம் கொடுத்தனர். அந்த மனுவில், “தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பானது. எனவே அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்த வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

பின்னர் விசுவ இந்து பரிஷத் இணை பொதுச்செயலாளர் ராகவலு, இணைச்செயலாளர் எஸ்.கோபாலரத்தினம் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

உணர்வுகளுக்கு மதிப்பு

அயோத்தியில் ராமர் பிறந்த இடமான ராமஜென்ம பூமியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அங்கு ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாடு முழுவதும் உள்ள இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.

இதுதொடர்பான வழக்கை கோர்ட்டும் 8 ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு சட்டம் கொண்டு வர வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம்.

எம்.பி.க்களிடம் வலியுறுத்துவோம்

இதேபோல ஒவ்வொரு மாநிலங்களிலும் நிர்வாகிகள் கவர்னர்களை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். மேலும், இதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரக்கோரி அனைத்து கட்சி எம்.பி.க்களையும் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.

மேலும் எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story