ஜெயலலிதா பெயரில் போலி ஆட்சி டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு


ஜெயலலிதா பெயரில் போலி ஆட்சி டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Nov 2018 10:15 PM GMT (Updated: 10 Nov 2018 10:15 PM GMT)

தமிழகத்தில் ஜெயலலிதா பெயரில் போலி ஆட்சி நடப்பதாக டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

தேனி, 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தமிழக அரசை கண்டித்தும், வளர்ச்சி திட்டப்பணிகள் செய்ய வலியுறுத்தியும் அ.ம.மு.க. சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.

மாநில துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

போலியான ஆட்சி

ஜெயலலிதாவின் பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் போலியான ஆட்சி நடத்துகின்றனர். கட்சிக்கும், ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்து யாருக்கோ பயந்து ஆட்சி செய்கிறார்கள்.

20 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் சரி ஆட்சி மாற்றம் செய்ய மக்கள் தயாராகி விட்டனர். கட்சியும், சின்னமும், பெயரும் மட்டும் இருந்தால் போதாது. இரட்டை இலை சின்னத்தை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவாக மக்கள் பார்த்தனர். இன்று துரோகிகளின் சின்னமாக பார்க்கின்றனர். அன்று வெற்றியின் சின்னமாக இருந்தது. இன்று துரோகத்தின் சின்னமாக மக்களால் பார்க்கப்படுகிறது. அதனால் எங்கு சென்றாலும் வெற்றியின் சின்னமாக குக்கரை மக்கள் காட்டுகிறார்கள்.

நியூட்ரினோ திட்டம்

ஆட்சியில் இருப்பவர்கள் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதை தடுக்க ஓ.பன்னீர்செல்வம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த திட்டம் தமிழகத்துக்கு, குறிப்பாக தேனி மாவட்டத்துக்கு பெரும் ஆபத்தானது. கேரள அரசு முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை தமிழக ஆட்சியாளர்கள் தடுக்காவிட்டால் தேனி மாவட்டத்தின் இயற்கை வளங்கள் அழிவதோடு, விவசாயமும் பாதிக்கப்படும் என எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story