எண்ணெய் வித்து, பயிறு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு மத்திய மந்திரி ராதாமோகன் சிங் தகவல்


எண்ணெய் வித்து, பயிறு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு மத்திய மந்திரி ராதாமோகன் சிங் தகவல்
x
தினத்தந்தி 12 Nov 2018 11:00 PM GMT (Updated: 12 Nov 2018 10:47 PM GMT)

விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்க வேளாண் திட்டங்களுக்கு கூடுதல் நிதி: எண்ணெய் வித்து, பயிறு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளதாக மத்திய மந்திரி ராதாமோகன் சிங் கூறினார்.

சென்னை,

சென்னையில் நிருபர்களுக்கு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி ராதாமோகன் சிங் அளித்த பேட்டி வருமாறு:-

வேளாண்மைப் பொருட்கள் உற்பத்தியின் மையமாக இருக்கும் இந்தியாவை, விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித் தரும் மையமாக மாற்றுவதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார். எனவேதான் அவர் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக உயர்த்துவதற்கு அசோக் தல்வாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை தனது அறிக்கையை அரசுக்கு அளித்து வருகிறது.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2009-14-ம் ஆண்டுகளில் வேளாண்மைத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில்தான் அதை இரட்டிப்பாக்கி ரூ.2.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாநில பேரிடர் நிதியாக தமிழகத்துக்கு 2010-15-ம் ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட ரூ.1,621 கோடி தொகை, 2015-2020-ம் ஆண்டுகளுக்கு ரூ.3,751 கோடியாக உயர்த்தப்பட்டது.

தமிழகத்தில் வேளாண்மைக்காக 23 சந்தைகள் உள்ளன. அதில் இ-மார்கெட்டிங் வசதி திட்டத்துக்காக ஒரு மார்க்கெட்டுக்கு தலா ரூ.75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சொட்டு நீர் பாசனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதற்காக 2014-15-ம் ஆண்டில் ரூ.63.90 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இதன் மூலம் 12 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.

இந்தத் தொகை 2017-18-ம் ஆண்டில் ரூ.250 கோடியாக உயர்த்தப்பட்டு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் சொட்டு நீர் பாசன வசதிக்கு கீழ் கொண்டுவரப்பட்டன. 2018-19-ம் ஆண்டில் இதற்கான தொகை ரூ.300 கோடியாக உயர்த்தி ஒதுக்கப்பட்டது.

எண்ணெய் வித்து, பயிறு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. 2015-16-ம் ஆண்டில் இதன் உற்பத்தி 16 மில்லியன் டன் ஆகவும், 2017-18-ம் ஆண்டில் 25.23 மில்லியன் டன் ஆகவும் உள்ளது. எனவே சில பயிறுகளுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை ஏற்றுமதிச் சந்தையில் அரிசி, காய்கறியின் அளவு அதிகரித்துள்ளது. 2010-14-ம் ஆண்டைவிட 2014-18-ம் ஆண்டுகளில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அரிசி (பாசுமதி தவிர்த்து) 84 சதவீதம், பழங்கள் 77 சதவீதம், காய்கறிகள் 43 சதவீதம், மசாலா பொருட்கள் 38 சதவீதம், முந்திரி 33 சதவீதம், பாசுமதி அரிசி 31 சதவீதம் கூடுதலாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடல்சார் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியும் 95 சதவீதம் அதிகரித்து உள்ளது.

இயற்கை விவசாயம், பாரம்பரிய விவசாயத்துக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது. பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவானவர்களின் எண்ணிக்கை 10.6 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story