நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது கஜா புயல் 15-ம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும்


நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது கஜா புயல் 15-ம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும்
x
தினத்தந்தி 13 Nov 2018 7:53 AM GMT (Updated: 13 Nov 2018 7:53 AM GMT)

கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது. 15-ம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

சென்னை

கஜா புயல் நாகை-சென்னை இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கும் என இந்தியா வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840  கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. புயல் தொடர்பாக சென்னை வானிலை மைய மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

கஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு 80-90 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். சில சமயங்களில் 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.

இந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் மீனவர்கள் யாரும் நவம்பர் 15 வரை கடலுக்கு செல்ல வேண்டாம். கனமழையை பொறுத்தவரை தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

நாகை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் இயல்பை விட ஒரு மீட்டர் அளவுக்கு கடல்மட்டம் உயரக்கூடும். கஜா புயலால் சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புயல் நகர்வு காரணமாக கடலூர், நாகை, ராமநாதபுரம் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். கடலில் அலை சீற்றம் அதிகமாக காணப்படும். சில இடங்களில் 20 செ.மீ., வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது.  அதிகாலை 5.30 மணி அளவில் மணிக்கு 5 கிலோ மீட்டராக இருந்த வேகம் காலை 8.30 மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது. சென்னையில் இருந்து 740 கி.மீ தொலைவில் கஜா புயல் தற்போது மையம் கொண்டுள்ளது. நாகையில் இருந்து 830 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. நாளை மறுநாள் முற்பகல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பிற்பகல் கரையை கடக்கும் என்று  வானிலை மையம் தெரிவித்து உள்ளது. 

கடந்த 40 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது தமிழகக் கடற்கரையை கடந்த புயலின் அழுத்தம் குறித்த விவரம்:-

1. 1978-ம் ஆண்டு இலங்கை புயல் 953 எம்.பி.(பிரஷர்)

2. 2000—ம் ஆண்டு கடலூர் புயல் 959 எம்.பி.

3. 1996-ம் ஆண்டு சென்னை புயல் 967 எம்.பி.

4. 1993-ம் ஆண்டு காரைக்கால் 968 எம்.பி.

5. 2011-ம் ஆண்டு தானே 969 எம்.பி.

6. 2000-ம் ஆண்டு இலங்கை புயல் 970 எம்.பி.

7. 1984-ம் ஆண்டு கடலூர் புயல் 973 எம்.பி.

8. 2016-ம் ஆண்டு வர்தா புயல் 975 எம்.பி.

9. 1984-ம் ஆண்டு ஹரிகோட்டா புயல் 975 எம்.பி.

Next Story