பா.ஜ.க. மீது யாரும் எதிர்க்கருத்துகள் கூற வாய்ப்பில்லை; ரஜினிகாந்த் தெளிவான பதிலை தெரிவித்துள்ளார்: தமிழிசை சவுந்தரராஜன்


பா.ஜ.க. மீது யாரும் எதிர்க்கருத்துகள் கூற வாய்ப்பில்லை; ரஜினிகாந்த் தெளிவான பதிலை தெரிவித்துள்ளார்:  தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 13 Nov 2018 4:29 PM GMT (Updated: 13 Nov 2018 4:29 PM GMT)

பா.ஜ.க. மீது யாரும் எதிர்க்கருத்துகள் கூற வாய்ப்பில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெளிவான பதிலை கூறியுள்ளார் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்தளவுக்கு பா.ஜ.க. ஆபத்தான கட்சியா? என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பதிலளிக்கும்பொழுது, அப்படி என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், அப்போது கண்டிப்பாக அப்படி தானே இருக்கும் என கூறினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அவர் பேசும்பொழுது, 
பா.ஜ.க. ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே.

ஒருவரை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால்  யார் பலசாலி? என கேட்டார். மோடிதான் பலசாலி என நீங்கள் சொல்வதாக செய்தி போடலாமா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இதை விட தெளிவாக சொல்ல முடியுமா என்று பதில் கேள்வி கேட்டார் ரஜினிகாந்த்.  பாஜக ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது. அதை மக்கள் முடிவு செய்யட்டும்.

நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை,  முழுமையாக இறங்கியதும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வேன் என கூறினார்.

இந்த நிலையில், பா.ஜ.க. மீது யாரும் எதிர்க்கருத்துகள் கூற வாய்ப்பில்லை.  ஏனென்றால் பா.ஜ.க. நேர்மறையான அரசியலை நடத்தி வருகிறது.  நடிகர் ரஜினிகாந்த் தெளிவான பதிலை தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் பலம் வாய்ந்தவர்கள் பா.ஜ.க. கூட்டணியில் இணைவார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Next Story