‘கஜா’ புயலை எதிர்கொள்ள உள்ளாட்சித்துறை தயார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்


‘கஜா’ புயலை எதிர்கொள்ள உள்ளாட்சித்துறை தயார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
x
தினத்தந்தி 13 Nov 2018 9:44 PM GMT (Updated: 13 Nov 2018 9:44 PM GMT)

‘கஜா’ புயலை எதிர்கொள்ள உள்ளாட்சித்துறை தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். மேலும் பேரிடர் காலங்களில் நிவாரண பணிகளுக்காக வாங்கப்பட்ட ரூ.4.86 கோடி மதிப்பிலான எந்திரங்களையும் மாநகராட்சி பணியாளர்களிடம் அவர் வழங்கினார்.

சென்னை,

சென்னை பெருநகர மாநகராட்சி இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.4 கோடியே 86 லட்சம் செலவில் மர அறுவை எந்திரங்கள், ஹைட்ராலிக் மூலம் இயக்கப்படும் மரக்கிளைகளை அகற்றும் எந்திரங்கள், நீர் இறைக்கும் பம்புகள், ஜெனரேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளது.

இந்த எந்திரங்களை மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். பின்னர் நிவாரண பணிகளை மேற்கொள்ள வாங்கப்பட்ட எந்திரங்களை மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கினர்.

இதையடுத்து இயற்கை பேரிடர் காலங்களில் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய ‘மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் 2018’ என்ற கையேடு வெளியிடப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னையில் பருவமழை காரணமாக ஏற்படும் பேரிடர் நிகழ்வுகளால் சாலையில் விழும் மரங்களை உடனுக்குடன் அகற்ற 171 மர அறுவை எந்திரங்களும், பருவமழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்குகின்ற மழைநீரை உறிஞ்சி வெளியேற்றுவதற்கு 17 நீர் இறைக்கும் பம்புகளும் தற்போது உள்ளன.

இந்நிலையில், கூடுதலாக 200 மர அறுவை எந்திரங்களும், 30 நீர் இறைக்கும் பம்புகளும், 8 மீட்டர் உயரத்தில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணிக்காக ஹைட்ராலிக் மூலம் இயக்கப்படும் 6 நவீனரக எந்திரங்கள், மழைக்காலங்களில் தெருவிளக்குகளை எரிய வைப்பதற்காக 100 ஜெனரேட்டர்கள் என மொத்தம் 336 நவீன எந்திரங்கள் மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.4.86 கோடியில் வாங்கப்பட்டுள்ளது. இவற்றைக்கொண்டு பேரிடர் காலத்தில் ஊழியர்கள் பணியை மேற்கொள்வார்கள்.

சென்னையில் 1,800 கி.மீ. தூரத்துக்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. பேரிடர்களை சமாளிப்பதற்காக சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறைகள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையின் கீழ் செயல்படும்.

இதுதவிர கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 ஆயிரம் வீடுகள் அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இது அரசு செய்த ஒரு மிகப்பெரிய சாதனையாகும். மேலும் ‘கஜா’ புயலை எதிர்கொள்ள உள்ளாட்சித் துறை தயாராக இருக்கிறது. அதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நிர்வாக முதன்மை செயலாளர் சத்தியகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story