ஜெயலலிதாவுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுக்கப்பட்டதாக கூறுவது பொய் அப்பல்லோ மருத்துவர் ஆணையத்தில் வாக்குமூலம்


ஜெயலலிதாவுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுக்கப்பட்டதாக கூறுவது பொய் அப்பல்லோ மருத்துவர் ஆணையத்தில் வாக்குமூலம்
x
தினத்தந்தி 13 Nov 2018 10:00 PM GMT (Updated: 13 Nov 2018 9:54 PM GMT)

ஜெயலலிதாவுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுக்கப்பட்டதாக கூறுவது பொய் என்று அப்பல்லோ மருத்துவர் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.

அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் ரமேஷ் வெங்கட்ராமன், நுரையீரல் நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் நரசிம்மன், நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ், கோத்தகிரி பேங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் அலோக்குமார் ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகினர்.

அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது மருத்துவர் நரசிம்மன், ‘ஜெயலலிதாவுக்கு மூச்சு விடுவதில் உள்ள பிரச்சினை குறித்து அறிந்துகொள்வதற்காக ஜெயலலிதா மூச்சு விடும்போது ஏற்படும் சத்தத்தை நான் தான் செல்போனில் பதிவு செய்யும்படி மருத்துவர் சிவக்குமாரிடம் கூறினேன். தொடர்ச்சியாக மூச்சுதிணறல் இருந்ததால் உரிய சிகிச்சை அளித்தேன். அந்த சமயத்தில் ஜெயலலிதா என்னிடம் 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தார். தனக்கு இருக்கும் நோய் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வந்து விட முடியுமா? எப்போது பணிக்கு திரும்பலாம்? என்று ஜெயலலிதா கேட்டார்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஒரு ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் அளவுக்கு தயிர்சாதம், சாம்பார் சாதம், கிச்சடி, ரவா உப்புமா, இட்லி, பொங்கல் போன்றவற்றை ஜெயலலிதா விரும்பி சாப்பிட்டார் என்றும், ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சைக்கு பின்னர் திட உணவுகள் சாப்பிட முடியும் என்றும் மருத்துவர் ரமேஷ் வெங்கட்ராமன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து ஜெயலலிதா கொல்லப்பட்டு இருக்கிறார் என்று சமீபத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக மருத்துவர் ரமேஷ் வெங்கட்ராமனிடம், ‘ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான மருத்துவகுறிப்பில் அல்லது ரத்த பரிசோதனை அறிக்கையில் ‘ஸ்லோ பாய்சன்’ (மெதுவாக கொல்லக்கூடிய விஷம்) கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளதா?’ என்று சசிகலா தரப்பு வக்கீல் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மருத்துவர் ரமேஷ் வெங்கட்ராமன், ‘அதுபோன்று கூறுவது பொய். அப்படி எதுவும் கிடையாது. நீண்ட நாட்களாக இருந்த நோய் பாதிப்பால் தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார்’ என்று கூறினார்.

குறுக்கு விசாரணை முடிவடைந்து வெளியே வந்த வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன், ‘அமைச்சர்களை பொறுத்தமட்டில் அமைச்சரவை கூடி ஒரு அரசாணை வெளியிட்டு ஆணையம் அமைத்த பின்பு, ஜெயலலிதா மரணம் குறித்து வெளியே எதுவும் பேசாமல் ஆணையத்தில் கூறுவது தான் சரியாக இருக்கும். அமைச்சராக பொறுப்பேற்கும்போது எடுத்துக்கொண்ட பதவி பிரமாணத்தை மீறி செயல்படும் அமைச்சர்கள் மீது கவர்னரிடம் புகார் அளிக்க உள்ளோம். திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ள கருத்து தொடர்பாக அவரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ஆணையத்தை வலியுறுத்தி உள்ளோம். அவரிடம் விசாரணை நடத்துவதாக ஆணையம் கூறி உள்ளது’ என்று கூறினார்.

Next Story