அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்


அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Nov 2018 10:21 PM GMT (Updated: 13 Nov 2018 10:21 PM GMT)

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுக்க உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 2 நாள் மாநிலக் குழு கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. கூட்டத்திற்கு, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமை தாங்கினார்.

கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராஜன், பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:- சேலம் தளவாய்ப்பட்டி தலித் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்பட மறுத்து பெற்றோரிடம் சொல்லியதை ஒட்டி, அவளது கழுத்தை தினேஷ் என்ற கொடியவன் அறுத்து, துண்டான தலையை வீதியில் போட்ட பயங்கர வன்முறையின் ஈரம் காய்வதற்கு முன்னேயே, அரூர் ஒன்றியம் சிட்லிங் கிராமத்தில் 17 வயது பழங்குடியின மாணவி, கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அதன் விளைவாக மரணமடைந்த செய்தி இடியென இறங்கியிருக்கிறது.

இதற்கிடையே திருச்சியில் 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு அ.தி.மு.க. பிரமுகரால் பாலியல் தொல்லை, திருப்பூரில் 4 வயது குழந்தை பாலியல் வல்லுறவு, தஞ்சை திருபுவனத்தில் 21 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வல்லுறவு, புதுக்கோட்டையில் 19 வயது பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

கடந்த 4 மாதங்களில் மட்டும் 7 மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுகளும், அதில் 3 கொலைக்குற்றங்களும் நடந்துள்ளன. இத்தகைய வன்முறைகளால் பாதிக்கப்பட்டு சோகத்தின் விளிம்பில் நிற்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழக அரசோ, முதல்-அமைச்சரோ, அதிர வைக்கும் இத்தகைய குற்றங்கள் குறித்து ஓர் அறிக்கை கூட வெளியிடுவதில்லை. அரசின் காவல்துறை, மருத்துவ துறையின் இதயமற்ற அணுகுமுறைக்கும், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு இல்லாததற்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும்.

அனுதினமும் அதிகரித்துக் கொண்டு வரும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்திட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உடனடியாக தமிழக முதல்-அமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும், வன்முறையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், இந்த மிக முக்கியமான பிரச்சினை குறித்து விவாதிக்க சட்டமன்றத்தின் ஓர் அவசர சிறப்புக்கூட்டத்தை நடத்திட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story