ரஜினிகாந்தின் கேள்வி, தமிழர்கள் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக குத்துகிறது ஜெயக்குமார் பேட்டி


ரஜினிகாந்தின் கேள்வி, தமிழர்கள் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக குத்துகிறது ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 13 Nov 2018 10:50 PM GMT (Updated: 13 Nov 2018 10:50 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் யார்? என்ற நடிகர் ரஜினிகாந்தின் கேள்வி தமிழர்கள் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக குத்துகிறது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 பேரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. இதுதான் தமிழர்களின் எண்ணமும். ஆனால் அந்த 7 பேர் யார்? என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டிருப்பது ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் நெஞ்சிலும் நெருஞ்சி முள்ளாக குத்துகிறது. அவர் வேற்று கிரகத்தில் இருந்தாரா? என்று எனக்கு புரியவில்லை. 7 பேர் விடுதலை செய்யவேண்டும் என்பதை ரஜினிகாந்த் நேற்றே (நேற்று முன்தினம்) தெரிவித்திருக்கலாம்.

விஜய் நடித்த ‘தலைவா’ படம் வெளிவந்தபோது சில சிக்கல்கள் இருந்தது. அப்போது ஜெயலலிதாவை விஜய் நேரில் சந்தித்தார். பவ்வியமாக நடந்துகொண்டார். அதை வைத்துதான் குளிர்விட்டு போய்விட்டது என்று சொன்னோம். அமைச்சர்கள் எல்லா சூழ்நிலையையும் தாங்கும் வல்லமை பெற்றுத்தான் விளங்குகிறோம்.

தணிக்கை குழு ஒப்புதல் அளித்த பின்னரும் பல படங்களில் காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கின்றன. மறைந்த தலைவர்களை புண்படுத்தக்கூடாது என்ற அடிப்படையில் தான் உணர்வுப்பூர்வமாக ‘சர்கார்’ படத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது. திட்டமிட்டோ, உள்நோக்கத்தோடோ நடத்தப்படவில்லை. திரைப்படம் வெளியாவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது. விமர்சனங்கள் ஆரோக்கியமான முறையில் இருக்கலாம்.

மறைந்த தலைவர்களை காயப்படுத்தும், அந்த தலைவரை நம்பி இருக்கும் தொண்டர்களை புண்படுத்தும் வகையில் இருப்பதற்கு இடம் கொடுக்கமுடியாது. சமீப காலங்களில் தான் இந்த போக்கு வளருகிறது. எம்.ஜி.ஆர். படங்களில் யாரையும் கொச்சைப்படுத்தியிருக்கிறாரா? எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை சொன்னார்கள். நல்ல கருத்துக்களை சொல்பவர்கள் தான் வரலாற்றில் நிலைத்து நிற்பவர்களாக இருக்கிறார்கள்.

வியாபார நோக்கத்தோடு, தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக மறைந்த தலைவர்களை சிறுமைப்படுத்தும் வகையில் படங்கள் இருந்தால் மக்களின் எதிர்ப்பு இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. எங்களை பொறுத்தவரை பா.ஜ.க. மத்தியில் ஆளும் அரசு. சுயாட்சி என்ற அடிப்படையில் எங்கள் உரிமையை யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம். மாநிலத்துக்கு தேவையான நிதிகளை பெற்று வளர்ச்சியடைய செய்யவேண்டும் என்பதற்காக உகந்த நிலையை மத்திய அரசோடு கடைபிடிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story